நகர சபை உப தவிசாளரின் பதவி பறிப்பு : சாவகச்சேரியில் முழு கடையடைப்பு போராட்டம்
சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்பட்டு, உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டமும், கடையடைப்பும் முன்னெடுக்கப்படுகின்றது.
சாவகச்சேரி வர்த்தகர்கள் இன்று (26) வெள்ளிக்கிழமை இந்த முழுநாள் கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து, அதனை தூக்கி வீசிய குற்றத்தில், நகர சபை உப தவிசாளர் ஞா.கிசோரை வடமாகாண ஆளுநர், உப தவிசாளரின் பதவியை நீக்கியும், நகர சபை உறுப்புரிமையை வறிதாக்கியும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளார்.
முழு கடையடைப்பு போராட்டம்
குறித்த சம்பவத்தை கண்டித்தும் நீதி கோரியும் சாவகச்சேரி சந்தை, வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு முழு கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இதேவேளை சாவகச்சேரி பகுதிகள் பாடசாலைகள், வங்கிகள், அரச நிறுவனங்கள், போக்குவரத்து சேவைகள் என்பன வழமை போன்று இயங்கி வருகின்றன.
இந்த போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், சுரேஷ் பிரேமசந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், சாவகச்சேரி நகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலதிக தகவல்கள் - த. பிரதீபன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





