ஜானகியின் 70 மில்லியன் பரிவர்த்தனை! நாமல் விவகாரத்தில் சிக்கிய இந்திய பணிப்பாளர்கள்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு 70 மில்லியன் ரூபா பணத்தை லஞ்சமாக வழங்கிய குற்றச்சாட்டின் பேரில், கிரிஷ் (Krrish) நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் குறித்த விசாரணை நகர்வுகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.
கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள டிரான்ஸ்வேர்க்ஸ் சதுக்கக் காணியை நகர அபிவிருத்தி அதிகாரசபையிடமிருந்து கிரிஷ் டிரான்ஸ்வேர்க்ஸ் கொழும்பு தனியார் நிறுவனத்திற்கு பெற்றுக்கொள்வதற்கும், அதற்கான அனுமதிகளை விரைவுபடுத்துவதற்கும் 70 மில்லியன் ரூபா இலஞ்சம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த விசாரணை தீவிரமடைந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அந்நிறுவனத்தின் முன்னாள் முகாமைத்துவப் பணிப்பாளர் கீதாஞ்சலி ஜானகி டி சொய்சா சிறிவர்தன வரகாகொடவை எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டுள்ளார்.
இந்திய பிரஜைகள்
குறித்த வழக்கில் கிரிஷ் நிறுவனத்தின் பணிப்பாளர்களான இந்திய பிரஜைகள் அமித் கட்டயார் மற்றும் ராஜேந்திர பிரசாத் ஆகியோருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கும் எதிராகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான இலஞ்சக் குற்றச்சாட்டில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல், இந்தச் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு அனுமதி வழங்குமாறும் இலஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ரக்பி விளையாட்டை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்காக 70 மில்லியன் ரூபா பெற்றுக்கொள்ளப்பட்டு நம்பிக்கை மோசடி செய்யப்பட்டதாக நாமல் ராஜபக்சவுக்கு எதிராக சட்டமா அதிபரால் ஏற்கனவே மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
எனினும், இலஞ்சம் வழங்குதல் மற்றும் பெற்றுக்கொள்ளுதல் தொடர்பான விசாரணை ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் தனியாக முன்னெடுக்கப்படுவதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு கிடைத்த எழுத்துமூல முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான அமா விஜேசிங்க நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
விசாரணைகளின்படி, கிரிஷ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மகாதேவ் நிறுவனத்தின் பிரதிநிதியாக செயற்பட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர், ஏனைய பணிப்பாளர்களுடன் இணைந்து நிமல் ஹேமசிறி பெரேரா என்பவரின் வங்கிக் கணக்கின் ஊடாக 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் 15ஆம் திகதி 40 மில்லியன் ரூபாவும், நவம்பர் 18ஆம் திகதி 10 மில்லியன் ரூபாவும், டிசம்பர் 12ஆம் திகதி 20 மில்லியன் ரூபாவும் என மூன்று சந்தர்ப்பங்களில் மொத்தம் 70 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
விசாரணைகளுக்கு ஒத்துழைக்குமாறு பதிவுத் தபால் மூலம் அறிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை பதிலளிக்காத இந்தியப் பிரஜைகளான நிறுவனத்தின் இரு பணிப்பாளர்களையும் கைது செய்வதற்கான பிடியாணைகளைப் பிறப்பிக்குமாறும் இலஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்திடம் கோரியுள்ளது.
பணப் பரிமாற்றம் இடம்பெற்றதாகக் கூறப்படும் வங்கிக் கணக்கின் உரிமையாளரான முக்கிய சாட்சியாளர் நிமல் ஹேமசிறி பெரேரா தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வருவதாகவும், தனக்கு விடுக்கப்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல்கள் காரணமாக இலங்கைக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இலஞ்ச விசாரணை ஆணைக்குழு
மேலும், எதிர்காலத்தில் குறித்த நிறுவனத்தையும் வழக்கில் சந்தேகநபராக பெயரிட நடவடிக்கை எடுக்கப்படும் என இலஞ்ச விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் சார்பில் முன்ன்லையான சட்டத்தரணி அமில திசாநாயக்க, 2015ஆம் ஆண்டு செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் 2016ஆம் ஆண்டு நாமல் ராஜபக்சவுக்கு எதிராக பி அறிக்கையை தாக்கல் செய்திருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து 2025ஆம் ஆண்டு இந்த விவகாரம் தொடர்பில் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த மேல் நீதிமன்ற வழக்கில் தற்போதைய சந்தேகநபரும் இந்தியப் பிரஜைகள் இருவரும் சாட்சியாளர்களாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதே சம்பவம் தொடர்பில் அவர்களை தற்போது சந்தேகநபர்களாக மாற்றுவது தொடர்பில் நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் என சட்டத்தரணி அமில திசாநாயக்க வாதிட்டுள்ளார்.
இந்நிலையில் வழக்கின் அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |