சிதறிய தமிழரசுக்கட்சி - யாழில் சிறீதரன் தலைமையில் வேட்பு மனு தாக்கல்
யாழ். மாவட்டத்தில் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தலைமையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பு மனுக்களை கையளித்துள்ளது.
யாழ்ப்பாணம் (jaffna) மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் (10.10.2024) இந்த வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுகின்றது. யாழ். தேர்தல் தொகுதியில் தமிழரசுக் கட்சி சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற்றும் சுமந்திரன் போட்டியிடவுள்ளனர்.
வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி
அத்துடன், எஸ்.சி.சி.இளங்கோவன், சட்டத்தரணி கேசவன் சயந்தன், சந்திரலிங்கம் சுகிர்தன், சுரேக்கா சசீந்திரன், இமானுவல் ஆர்னோல்ட், கிருஸ்ணவேணி சிறிதரன், தியாகராஜா பிரகாஷ் ஆகியோரும் யாழ். மாவட்ட வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுமந்திரன் என்ற தனிநபரின் ஆதிக்கத்தால் கட்சியின் தலைவர் உள்ளிட்ட பல முக்கிய உறுப்பினர்கள் பலர் கட்சி மற்றும் பதவிகளில் இருந்து விலகி வருகின்றனர்.
தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mawai Senadhiraja) மற்றும் ஏனையவர்களின் பதவி விலகல் கடிதங்கள் எவையும் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை என கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கம் (P. Sathyalingam) தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத் தமிழரசுக் கட்சி
இதேவேளை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) வேட்பாளர் பட்டியலால் அதிருப்தியடைந்த அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தலைமையில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சைக் குழுவாகப் போட்டியிடவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனநாயகத் தமிழரசுக் கட்சி என்ற பெயரில் இந்தச் சுயேட்சைக் குழு தேர்தலில் களமிறங்கவுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சுயேச்சைச் குழுவில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், தமிழரசுக் கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த விமலேஸ்வரி, ஐ.நாகரஞ்சினி, முன்னாள் கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் த.ஐங்கரன், அகிலன் முத்துக்குமாரசுவாமி, ஊர்காவற்றுறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கருணாகரன் நாவலன் ஆகியோருடன் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசனும் உள்ளடங்குவர்.
மேலதிக செய்திகள் - தீபன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |