தமிழரசுக்கட்சியால் தான் தமிழ்மக்களுக்கு இந்தநிலை - முன்னாள் எம்.பி
தமிழரசுக்கட்சி (Ilankai Tamil Arasu Kachchi) ஒன்று இருப்பதன் காரணமாகவே இந்த மண்ணில் தமிழ் மக்கள் தனித்துவமாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக்கட்சியின் ஊடாக எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டம் இன்று மாலை மட்டக்களப்பு செங்கலடியில் நடைபெற்றுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த போதே ஞா.சிறிநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழரசுக்கட்சி தமிழர்களுக்கு என்ன செய்தது என்பதை அனைவரும் இலகுவாக கேட்பார்கள்.
தமிழரசுக்கட்சியின் ஆதிக்கம்
ஆனால் தமிழரசுக்கட்சி ஒன்று இருப்பதன் காரணமாகத் தான் இந்த மண்ணில் தமிழர்கள் தனித்துவமாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது என்பதை மறந்துவிடக்கூடாது.
புத்தளம், நீர்கொழும்பு பகுதிகளில் தமிழர்கள் வாழ்ந்த நிலையில் அங்கு தமிழரசுக்கட்சியின் ஆதிக்கம் குறைந்து தேசிய கட்சிகளின் ஆதிக்கம் அதிகரித்த காரணத்தினால் அங்கு வாழ்ந்த தமிழர்கள் அரைகுறை தமிழர்களாக, தமிழை மறந்தவர்களாக மாறியிருக்கின்றார்கள்.
ஆனால் வடகிழக்கில் 1949ஆம் ஆண்டு தொடக்கம் எமது கட்சி ஆற்றிய பணிகள் காரணமாக தமிழர்கள் இன்றும் தனித்துவமாக தமது பண்பாடுகளுடன் தலைநிமர்ந்து நிற்கின்றார்கள் என்பதை மறக்ககூடாது. தமிழரசுக்கட்சியானது உரிமையா சலுகையா எனக்கேட்கின்றபோது எங்களுக்கு உரிமை வேண்டும் என்று சொல்லுகின்ற கட்சியாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக்கட்சியின் முன்னாள் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் இரா.சாணக்கியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |