சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிராக முல்லைத்தீவில் வெடித்த போராட்டம்
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்ட கடற்றொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (10) குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தின் போது மாவட்ட செயலர் அ. உமாமகேஸ்வரனிடம் மனு ஒன்றை கையளித்துள்ளனர்.
சட்டவிரோத மீன்பிடி
கடல் வளத்தை பாதுகாக்க வேண்டிய அரசே ஏன் கடல் வளத்தை சுரண்ட துணை நிக்கிறாய், கடற்படையினரே சட்டவிரோத வெளிச்சம் உன் கண்களுக்கு தெரியவில்லையா, அரசே சட்டவிரோத தொழிலுக்கு துணைபோகாதே, எதிர்கால பரம்பரைக்கு உப்பு நீரா மிச்சம், கடற்படையினரே எமது வாழ்வாதாரத்தை பாதுகாத்து தாரும், அடிக்காதே அடிக்காதே மீனவர்கள் வயிற்றில் அடிக்காதே போன்ற பதாகைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முல்லைத்தீவு மாவட்ட செயலர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நேரடியாக சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது அவர், கடற்றொழிலாளர்கள் பிரச்சினைகளை நாம் அறிவோம் விரைவில் சட்டவிரோத மீன்பிடிக்கு நடவடிக்கை எடுப்பதாகவும், நேற்று முன்தினம் கிழக்கு மாகாண கடற்படை அதிகாரி மற்றும் உதவிப் பணிப்பாளர் சட்டவிரோத மீன்பிடியைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடியதாகவும், மீனவர்கள் பிரச்சினை தொடர்பான 3வது கூட்டம் தொடர்பாக கடற்தொழில் அமைச்சரிடம் கேட்டுள்ளதாகவும், வருகின்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாகவும் கடற்றொழிலாளர்களை சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம், என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த போராட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழில் கிராமிய அமைப்புக்களின் தலைவர் செல்லதுரை நற்குணம் யாழ்ப்பாண மாவட்ட மீனவ கூட்டுறவு சம்மேளன உப தலைவர் அந்தோனிப்பிள்ளை பிரான்ஸிஸ் ரட்ணகுமார் மற்றும் யாழ் மாவட்ட மீனவர்கள், முல்லைத்தீவு மாவட்ட சம்மேளன மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |