தாயக வளத்தை சூறையாடுவதற்கு இடமளிக்கக் கூடாது - கடற்றொழிலாளர்கள் கோரிக்கை
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி தமிழக கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களின் படகுகளை விடுக்க வேண்டாம் என தமிழர் தாயக கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழர் தாயக வளத்தை சூறையாடுவதற்கு தமிழக கடற்றொழிலாளர்களுக்கு இடமளிக்கக் கூடாது என முல்லைத்தீவு கடற்றொழில் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் கடந்த 28 ஆம் திகதி மீன்பித்த நிலையில் வைகது செய்யப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்கள் 24 பேர் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற கட்டணையின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் போராட்டம்
அவர்களிடமிருந்து ஐந்து படகுகளையும் கடற்படையினர் பறிமுதல் செய்திருந்தனர். எதிர்வரும் 12ஆம் திகதி வரை இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த கடற்றொழிலாளர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் ஸ்ராலின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
தமிழக கடற்றொழிலாளர்களின் 105 படகுகள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார். குறித்த கடற்றொழிலாளர்களை விடுவிக்குமாறு தமிழகத்தில் போராட்டமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கடற்றொழில் சம்மேளனம் கண்டனம்
இந்த நிலையில் இந்திய கடற்றொழிலாளர்கள் மேற்கொள்ளும் போராட்டத்திற்கு முல்லைத்தீவு கடற்றொழில் சம்மேளனம் கண்டனம் வெளியிட்டுள்ளதுடன், படகுகளை விடுவிக்க வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் சம்மேளன தலைவர் வி.அருள்நாதன் மற்றும் வண்ணாங்குளம் கிராமிய கடற்றொழில் சங்க தலைவர் வே.சிவகுமார் ஆகியோர் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று ஊடகசந்திப்பை நடத்தியிருந்தனர்.