கல்முனையில் மக்களை பாதிக்கும் மதுபானசாலை : நாடாளுமன்றில் கொந்தளித்த எம்.பி
கல்முனை நீலாவணையில் மக்களை பாதிக்கின்ற மதுபானசாலை அமைப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் (K. Kodeeswaran) கோரிக்கை விடுத்துள்ளார்.
கிளீன் சிறிலங்கா தொடர்பாக நாடாளுமன்றில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “விசேடமாக க்ளீன் சிறிலங்காவின் ஊடாக இந்த நாட்டை சிறப்பாக நடத்துவதற்காக முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் என்னாலான அனைத்து ஒத்துழைப்பையும் நான் வழங்குவதற்கு தயாராக உள்ளேன்.
இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக க்ளீன் கிளீன் சிறிலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு முன்னேற்பாடாக 500 பேருக்கு மேற்பட்ட நீலாவணை பொதுமக்கள் ஒன்றுகூடி நீலாவணையில் அமைக்கப்பட்ட மதுபானசாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை செய்து கொண்டிருக்கின்றார்கள்.
பாடசாலை மாணவர்கள்
இந்த மதுபானசாலை அந்த இடத்திலே அமைக்கப்படும் என்றால் அங்கே இருக்கின்ற பாடசாலை மாணவர்கள் அதேபோல் அன்றாடக் கூலி வேலை செய்கின்ற வர்க்கத்தினர் மிகவும் பாதிப்புக்குள்ளாகின்ற சந்தர்ப்பம் ஏற்படக்கூடிய வாய்ப்புண்டு.
அதேபோல், இளம் மாணவர்கள் பாதிப்படைகின்றார்கள் அத்துடன் இதை நீங்கள் ஏதோ ஒருவகையில் உங்களது சட்டத்துக்கு உட்பட்ட வகையில் ஜனாதிபதிக்கு இருக்கின்ற அதிகாரத்தைக் கொண்டு அதனை தடுத்து நிறுத்த வேண்டும்.
கடந்த மூன்று மாதத்துக்கு முன் நீலாவணையிலே அந்த மதுபானசாலை திறக்கப்பட்டிருந்தது.எனினும் மக்களின் ஆர்ப்பாட்டத்தின் காரணமாக அது மூடப்பட்டிருந்தது.
ஆனால், தற்பொழுது அதனை திறப்பதற்காக kegalle Beverage லிமிடெட் என்ற மதுபானசாலை கம்பெனியானது முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கின்றது.
மாணவர்கள் பாதிப்பு
ஆகவே, அந்த மக்கள் மதுபானசாலையை இல்லாமல் செய்வதற்காக கிளீன் சிறிலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையிலே ஆர்ப்பாட்டம் செய்கின்ற நிலையில் அவர்களுக்குரிய ஒத்துழைப்பை இந்த அரசாங்கம் வழங்க வேண்டும்.
ஏனென்றால், இந்த அரசு மதுபானசாலைகளுக்கு கொடுத்த அனுமதிப்பத்திரத்தை நாங்கள் ஒழிப்போம், மதுபானசாலைகளை இல்லாமல் செய்வோம் என்று சொல்லிவிட்டு வந்த பின்பு நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெற்று முடிந்தது.
இன்று மதுபானசாலையை அமைப்பதற்கான நடவடிக்கை அந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
ஆகவே, இதனைத்தடுத்து நிறுத்த வேண்டிய கடமைப்பாடு உங்களுக்குள்ளது. ஏனென்றால் பொருளாதாரத்திலே பெரிய தாக்கத்தை அது ஏற்படுத்துகின்றது.
மாணவர்கள் பாதிப்புக்குள்ளாக நேரிடுகின்றது, அதேபோல் அன்றாடக் கூலித் தொழில்கள் செய்கின்றவர்கள் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
கூடுதலான வாக்கு
தென் பகுதியிலே இருக்கின்ற மதுபானசாலை உரிமை பத்திரத்தில் இருக்கின்றவர்கள் கல்முனை பிரதேசத்திலே வந்து மதுபானசாலை அமைப்பதற்கான திட்டங்களை வகுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆகவே அரசு இதனைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், நீங்கள் பழைய ஆட்சிக்காலத்திலே செய்யப்பட்ட தவறுகளை நிவர்த்தி செய்வதற்காகத்தான் உங்களுக்கு மக்கள் 159 பிரதிநிதித்துவ ஆணையை தந்திருக்கிறார்கள்.
விசேடமாக எமது மக்கள் உங்களுக்காகத்தான் கூடுதலான வாக்குகளை அளித்தார்கள். ஆனால் தற்போது ஏமாற்றத்தை சந்தித்த வண்ணம் இருக்கின்றார்கள்.
மேலும் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இருக்கின்ற பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்துக்கு சொந்தமான இரண்டு காணிகள், மட்டுமல்ல, 100X40 அளவிலான இரண்டு கட்டடங்களில் 2020ஆம் ஆண்டு முகத்துவாரத்திலே இருக்கின்ற இலங்கை தரைப்படையானது, இயக்குனர் சபையினதும் பொதுச் சபையினதும் அனுமதி இல்லாமல் வலுக்கட்டாயமாக அந்த காணிகளையும் கட்டடத்தையும் அபகரித்துள்ளது.
கிட்டத்தட்ட 1969ஆம் ஆண்டில் இருந்து அதனை பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தினர் பராமரித்து வந்திருக்கிறார்கள் இதற்காக அவர்கள் கூட்ட தீர்மானத்தின் ஊடாக பல கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்து இருக்கிறார்கள் .
நெல் கொள்வனவு
அதேபோல் 1991ஆம் ஆண்டு நெல் கொள்வனவு செய்து சுத்திகரிப்பதற்காக இயந்திர உபகரணங்களை அமைத்திருந்தார்கள் ஆனால் அனைத்தையும் இல்லாமல் செய்துவிட்டு ஏற்றுக்கொள்ள முடியாத வகையிலே படையினர் அந்த காணியை அபகரித்து இருப்பது உண்மையாக கவலைக்குரிய விடயமாக இருக்கின்றது.
அந்தக் காணி ஆலையடி வேம்பு பொதுமக்களுக்குரிய சொத்து. பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்துக்குரிய சொத்து, அவர்களுடைய சந்தா பணத்திலிருந்து வந்த சொத்து.
அதுமட்டுமல்ல, அவர்கள் நெல்லை கொள்வனவு செய்து குறைந்த கட்டுப்பாட்டு விலையிலே அரிசியினை, அரசாங்க அதிபர் அதே போல் பிரதேச செயலாளர் மற்றும் கூட்டுறவு ஆணையாளர் ஆகியோரின் அனுமதியுடன் பொதுமக்களுக்காக விநியோகித்திருந்தார்கள்.
ஆனால் 2023 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் வலுக்கட்டாயமாக அதை எடுத்திருக்கிறார்கள். 2010 ஆம் ஆண்டு தரைப்படையின் தலைமையலுவலகமானது அந்தக் காணியை கொடுக்கும்படி இராணுவ தலைமையகத்துக்கு தகவல் அனுப்பியிருந்தது.
அதேபோல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அந்த அறிவுறுத்தலை விடுத்திருந்தார், அது மட்டுமல்ல இராணுவ கட்டளைத் தளபதி கூட அதனை பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்துக்கு திருப்பி வழங்கியிருந்தார்.
எனவேதான், இந்த விடயங்களை கருத்தில் கொண்டு அதனை மக்கள் செயற்பாட்டிற்காக மீண்டும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |