வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்புபவரா நீங்கள்? மத்திய வங்கி விசேட அறிவிப்பு
வெளிநாடுகளிலிருந்து இலங்கையிலுள்ள உறவினர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் பணங்கள் சட்டவிரோதமான முறையில் கொடுக்கல் வாங்கல் செய்யப்படுவது குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றி வெளிநாட்டு நாணயக் கொடுக்கல்வாங்கல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் வெளிநாட்டு நாணயங்களைக் கொள்வனவு செய்வதற்கான, விற்பனை செய்வதற்கான, பரிமாற்றம் செய்வதற்கான அனுமதி, அதிகாரமளிக்கப்பட்ட வங்கிகளுக்கும் இலங்கை மத்திய வங்கியினால் நியமிக்கப்பட்ட நாணய மாற்றுநர்களுக்கும் மாத்திரம் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே வெளிநாட்டு நாணயத்தின் கொள்வனவு, விற்பனை அல்லது பரிமாற்றம் என்பன அதிகாரமளிக்கப்பட்ட வணிகர் ஒருவர் ஊடாக அல்லது அதிகாரமளிக்கப்பட்ட நாணய மாற்றுநர் ஊடாக மாத்திரமே மேற்கொள்ளப்படல் வேண்டும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் எவரேனும் ஆள், நிறுவனம், அல்லது ஏதேனும் வேறு அமைப்பு வெளிநாட்டு நாணயக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவது குற்றம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால், அதிகாரமளிக்கப்படாத எவரேனும் நபர், நிறுவனம் அல்லது ஏதேனும் அமைப்பு வெளிநாட்டு நாணய வணிகங்களில் ஈடுபடுபட்டால் அறிவிக்குமாறு இலங்கை மத்திய வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்ய விசேட தொலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.