இலங்கை கோரிக்கையை விடுத்தால் பேச்சுவார்த்தைக்கு தயார் - சர்வதேச நாணய நிதியம்
இலங்கை நிதி தொடர்பான கோரிக்கை விடுத்தால், அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதானி இதனைத் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சர்வதேச நாணய நிதியத்தில் பணித் தலைவர் மற்றும் துணைப் பிரிவுத் தலைவர் மசாஹிரோ நோசாகி (Masahiro Nozaki ) கருத்து வெளியிடுகையில், "இலங்கையில் பொருளாதார மற்றும் கொள்கை முன்னேற்றங்களை சர்வதேச நாணய நிதியம் நெருக்கமாகக் கண்காணித்து வருகிறது" என தெரிவித்துள்ளார்.
பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் கொள்கைகளை மீளாய்வு செய்வதற்காக வருடாந்த இருதரப்பு கலந்துரையாடலின் ஒரு பகுதியாக நிதிக் குழுவொன்று கடந்த வருடம் டிசம்பரில் கொழும்புக்கு விஜயம் செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நாட்டின் சமீபத்திய பொருளாதார தரவுகளை மதிப்பாய்வு செய்வதற்காக பெப்ரவரி இறுதியில் ஒரு குழு கூட்டம் நடைபெறும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை ,பொருளாதார பிரச்சினையைத் தீர்ப்பதற்காகச் சர்வதேச நாணய நிதியத்தின் நிபுணத்துவ ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கான கோரிக்கை எழுத்து மூலம் விடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச முன்னதாக தெரிவித்திருந்தார்.
நிதி அமைச்சின் பேரண்ட நிதிப்பிரிவுக்கு ஆலோசனை பெறும் செயற்பாடாகவே சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைப் பெறப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
