சிறிலங்காவிற்கு சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கல் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!
சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக சிறிலங்காவிற்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கொண்ட விரிவான நிதி வசதி வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இந்த நிதி வசதிக்கு இந்த வருட இறுதிக்குள், அங்கீகாரம் வழங்கப்படும் எனவும் நம்பப்படுகிறது.
இது தொடர்பில் நேற்று முதலீட்டாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகள் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலந்துரையாடலையடுத்து வெளியிடப்பட்ட நம்பிக்கை
இந்த கலந்துரையாடலில் பங்குபற்றியவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இவ்வாறு நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறான நிலையில், சர்வதேச நாணய நிதியத்திற்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் எவ்விதமான ஒப்பந்தங்களும் இது வரை கைச்சாத்திடப்படவில்லை என சிறிலங்கா அதிபர் தனக்கு அறிவித்ததாக, சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர், நேற்று முன்தினம் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
