சர்வதேச நாணய நிதியத்துடன் எந்த ஒப்பந்தங்களும் கைச்சாத்திடவில்லை - வெளியானது அறிவிப்பு!
சர்வதேச நாணய நிதியத்திற்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் எவ்விதமான ஒப்பந்தங்களும் இது வரை கைச்சாத்திடப்படவில்லை என சிறிலங்கா அதிபர் தனக்கு அறிவித்ததாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே வெளியிட்டுள்ளார்.
அதுமட்டுமன்றி பணியாளர் மட்ட ஒப்பந்தம் தொடர்பாக இதுவரையில் அமைச்சரவைக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் அதிபர் தெரிவித்ததாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை
மேலும், தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு மட்டுமே எட்டப்பட்டதாகவும், இது குறித்து அமைச்சரவையிலும் கலந்துரையாடப்படவில்லை எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் குறித்து சபாநாயகர், பிரதமர், கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
கலந்துரையாடிய பின்னரே விளக்கம்
இவ்வாறு கலந்துரையாடி, எல்லா தகவல்களும் கிடைத்த பிறகு அமைச்சரவைக்கு விளக்கம் அளிக்கப்படும். மேலும், எதிர்க்கட்சிகள் மற்றும் ஆர்வமுள்ள கட்சிகள் மாநாட்டில் பங்கேற்கலாம் என்றும் அதிபர் தன்னிடம் கூறியதாகவும் சபாநாயகர் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

