காவல் நிலையத்தில் இளம் குடும்பஸ்தர் மரணம் : பாரபட்சமற்ற விசாரணைக்கு வலியுறுத்து
ஹோமகம காவல் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்த சந்தேக நபரான இளம் குடும்பஸ்தர் இஷாரா ஹர்ஷ குமாரவின் மரணம் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள சட்டத்தரணிகள் சங்கம், இவ்விஷயம் குறித்து உடனடியாக பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்துமாறு காவல்துறை மா அதிபரையும் மற்ற அதிகாரிகளையும் கேட்டுக்கொண்டுள்ளது.
உயிரைப் பறிக்க எந்தவொரு அதிகாரத்திற்கும் உரிமை இல்லை
காவலில் உள்ள ஒவ்வொரு நபரின் உயிருக்கும் உடல் நலத்திற்கும் பாதுகாப்பு அளிப்பது அரசின் அடிப்படைக் கடமையாகும் என்றும், அரசியலமைப்பின் 13(4) பிரிவின்படி முறையான நீதிமன்ற உத்தரவு இல்லாமல் ஒரு நபரின் உயிரைப் பறிக்க எந்தவொரு அதிகாரத்திற்கும் உரிமை இல்லை என்றும் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.

காவலில் வைக்கப்படும்போது நிகழும் சித்திரவதைகளையும் மரணங்களையும் கண்டிப்பதாகவும், இச்சம்பவம் தொடர்பாக எதிர்காலத்தில் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டத்தரணிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
உறவினர்களின் குற்றச்சாட்டு
போதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், காவல் நிலையத்திற்குள் கொடூரமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இருப்பினும், திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சந்தேக நபர், ஹோமாகம ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் மூன்று காவல்துறை அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |