காவல்துறையால் கைது செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தர் கொடூரமாக தாக்கி படுகொலை : உறவினர்கள் குற்றச்சாட்டு
போதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் இன்று (25)காலை ஹோமாகம காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் ஒருவர் கொடூரமாகத் தாக்கிக் கொல்லப்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இறந்தவர், கிரிவத்துடுவ, முனமலேவத்த எனும் இடத்தைச் சேர்ந்த, ஒரு குழந்தைக்குத் தந்தையான 29 வயது இஷாரா ஹர்ஷ குமார ஆவார்.
காவல்துறை அதிகாரிகளின் தாக்குதலால் உயிரிழப்பு
கைது செய்யப்பட்ட இளைஞரின் உறவினர்கள் குழு ஒன்று ஹோமாகம பிரதம காவல் நிலையத்திற்கு சென்றபோது, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த இளைஞர், நான்கு காவல்துறை அதிகாரிகளுடன் திரும்பி வந்ததாகவும், காவல்துறை அதிகாரிகளின் தாக்குதலின் விளைவாகவே அந்த இளைஞர் உயிரிழந்ததாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

உறவினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, காவல்துறை சிறையில் இருந்த அந்த இளைஞரை ஹோமாகம ஆதார மருத்துவமனையில் சேர்க்க ஹோமகம காவல்துறை நடவடிக்கை எடுத்தபோதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக உறவினர்கள் கூறுகின்றனர்.
எனவே, தங்கள் இறந்த உறவினருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.
ஹோமாகம ஆதார மருத்துவமனை வளாகத்தில் பதற்றம்
ஹோமாகம ஆதார மருத்துவமனை வளாகத்தில் இறந்த குடும்பஸ்தரின் உறவினர்கள் தகாத முறையில் நடந்துகொண்டதால், அருகிலுள்ள காவல் நிலையங்களிலிருந்து மேலதிக காவல்துறையினரை மருத்துவமனை வளாகத்திற்கு வரவழைக்க காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தது.

இதன் காரணமாக, அந்த இடத்தில் மிகவும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
ஹோமாகம காவல்துறை கண்காணிப்புப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர், சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டு மறுக்கப்படுவதாகவும், இது தொடர்பாக ஒரு உதவி காவல்துறை கண்காணிப்பாளரின் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்படும் என்றும் கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |