கொழும்பில் கல்வி அமைச்சுக்கு முன்னால் வெடித்த போராட்டம்
தரம் 6 இற்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துமாறு கோரி கொழும்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (16) குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
2026ஆம் ஆண்டில் 6ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களும் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
வலியுறுத்தப்பட்ட விடயம்
அத்துடன் சர்ச்சைக்குரிய ஆங்கிலப் பாட கற்றல் தொகுதியை தவிர, ஏனைய பாடங்கள் தொடர்பான கற்றல் தொகுதிகளை மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.
பாடப்புத்தகச் சுமையைக் குறைத்து, மாணவர்களுக்கு இலகுவான முறையில் கல்வியை வழங்கும் நோக்கில் இந்த புதிய தொகுதி முறையை விரைவுபடுத்துமாறு இதன்போது பெற்றோர்கள் தெரிவித்தனர்.

தமது கோரிக்கைகளை உள்ளடக்கிய மகஜர் ஒன்றில் கையெழுத்திட்ட பெற்றோர்கள், அதனை கல்வி அமைச்சின் அதிகாரிகளிடம் கையளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, பெற்றோர்களில் ஒரு குழுவினர் அமைச்சின் அதிகாரிகளுடன் நிலவரம் குறித்துக் கலந்துரையாடுவதற்காக கல்வி அமைச்சுக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதேவேளை இலங்கையின் பாடசாலைக் கட்டமைப்பில் இந்த ஆண்டு (2026) அறிமுகப்படுத்தப்படவிருந்த தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை, எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |