ஞானசார தேரரின் பொதுமன்னிப்பு விவகாரத்தில் ரணிலுக்கு கிடைத்த முக்கிய கடிதம்!
கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதற்கான தீர்மானம், மகா சங்கத்தினர், அமைச்சர்கள் மற்றும் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருடன் நடத்தப்பட்ட விரிவான கலந்துரையாடல்களின் பின்னரே எடுக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் அலுவலகத்தில் நடைபெற்ற கட்சியின் சட்டத்தரணிகள் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,
காவியுடையைத் துறக்க வேண்டிய நிலை
“ஞானசார தேரர் சிறைத்தண்டனை அனுபவித்த காலப்பகுதியில், அவர் காவியுடையைத் துறக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என்ற பாரதூரமான ஆபத்து குறித்து அக்காலத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் ஞானசார தேரருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினை எழுந்தது.
அந்தக் காலப்பகுதியில், ஞானசார தேரர் காவியுடையை இழக்க வேண்டிய நிலை ஏற்படாது என உறுதியளித்து, அப்போதைய நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச, கொட்டபிட்டிய ராஹுல தேரருக்கு அனுப்பிய கடிதம் ஒன்றும் தம்மிடம் இருந்தது.
இதனையடுத்து, பல பௌத்த பிக்குகள் தம்மைச் சந்தித்து, சங்க ஒழுக்க விதிகள் தொடர்பான மரபுகளை விளக்கியிருந்தோம்.
பாராஜிகா எனப்படும் பௌத்த ஒழுக்க விதிகளின் கீழ் வரும் குற்றமாக இல்லாத ஒன்றுக்காக ஒரு பிக்குவின் காவியுடையை நீக்குவது, பாரிய மத மற்றும் அரசியலமைப்புச் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என அவர்கள் சுட்டிக்காட்டினார்.
நீதிமன்றத்தை அவமதிப்பது அல்லது அதன் நடவடிக்கைகளுக்குத் தடையாக இருப்பது ஒரு பிக்குவுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தையாகும் என மகா சங்கத்தினர் தெரிவித்தனர்.
இத்தகைய தவறுகளுக்கு எதிராக உரிய சாசன அதிகாரிகள் ஊடாக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்என அவர்கள் விளக்கியிருந்தனர்” என அவர் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |