பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருக்கு ஏற்பட்ட நிலை
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இம்ரான் கானை கைதுசெய்வதற்கு எதிராக அவரின் வீட்டிற்கு முன்னால் ஆதரவாளர்கள் ஒன்றுகூடியுள்ளதால் பதற்றமான நிலைமை நீடிக்கின்றது.
தமக்கு நெருக்கமான ஒருவரை தடுத்துவைத்து சித்திரவதை செய்ததாக காவல்துறை மற்றும் நீதித்துறை மீது இம்ரான் கான் குற்றஞ்சாட்டியதை தொடர்ந்து அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இம்ரான் கானின் கடுமையான விமர்சனம்
கடந்த ஏப்ரல் மாதம் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதிலிருந்து இம்ரான் கான் அரசாங்கத்தையும் நாட்டின் இராணுவத்தையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது நெருங்கிய உதவியாளரை அதிகாரிகள் சித்திரவதை செய்ததாக இம்ரான் கான் குற்றஞ்சாட்டியதை அடுத்து காவல்துறை அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.
இஸ்லாமாபாத்தின் காவல்துறை தலைவர் மற்றும் தடுப்பு காவல் உத்தரவை வழங்கிய பெண் நீதிபதி ஆகியோருக்கு இம்ரான் கான் கண்டனம் வெளியிட்டுள்ளார். அத்துடன் தனது சகாவை தவறான முறையில் நடத்தியமை தொடர்பிலும் அவர் விமர்சனம் முன்வைத்துள்ளார்.
பயங்கரவாத தடுப்பு குற்றச்சாட்டு
அத்துடன் இருவருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இம்ரான் கான் தனது உரையில் நேரடியாக எச்சரித்திருந்த நிலையில், அவருக்கு எதிராக பயங்கரவாத தடுப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அரச அதிகாரிகளுக்கு எதிராக மிரட்டல் விடுத்ததன் மூலம் நாட்டின் சட்டத்தை மீறியதாக அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
இரவோடு இரவாக கவிழ்ந்தது பாகிஸ்தான் அரசு - இம்ரான் கான் பதவி நீக்கம் |