நகர சபையின் எதிர்க் கட்சி உறுப்பினரின் பிறந்தநாள் விருந்து உபசாரத்தால் ஏற்பட்ட விபரீதம்!
ஹட்டன் டிக்கோயா நகர சபையின் செயலாளர், முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர், ஹட்டன் டிக்கோயா நகரசபையின் எட்டு உறுப்பினர்கள் உட்பட பத்து பேர் 14நாட்களுக்கு சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஹட்டன் டிக்கோயா பொது சுகாதார பரிசோதகர் ராமையா பாலகிருஸ்ணண் தெரிவித்துள்ளார்.
இந்த பத்து பேரும் இன்று சுயதனிமைபடுத்தபட்டுள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஹட்டன் டிக்கோயா நகரசபையின் எதிர்க் கட்சி உறுப்பினர் ஒருவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு கடந்த 19ம் திகதி பிறந்தநாள் விருந்து உபசாரத்தில் இவர்கள் கலந்து கொண்டுள்ளதாகவும், இந்த விருந்து உபசாரத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹட்டன் டிக்கோயா நகர சபையின் உறுப்பினர் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த உறுப்பினருக்கு நேற்றய தினம் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு அக்கரபத்தனை பிரதேச சபையின் தலைவர் ஊடாக தொற்று பரவியுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகளின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பத்துபேருக்கு நேற்றைய தினம் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் மாதிரிகள் நுவரெலியாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தொற்றுக்குள்ளான அக்கரபத்தைனை பிரதேசசபையின் தலைவரோடு தொடர்பினை பேணி வந்த ஹட்டன் டிக்கோயா நகரசபையின் தலைவர் மூன்று நாட்களுக்கு முன்பு தனிமைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.