திட்டமிட்டு அழிக்கப்படும் தமிழ்ப் பண்ணையாளர்களின் வாழ்வாதாரம்
மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் தமிழ்ப் பண்ணையாளர்களின் கால்நடைகள் தொடர்ச்சியாகச் சுட்டுக் கொல்லப்படுவதும், பண்ணையாளர்கள் அச்சுறுத்தப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்ள்ளது.
1,095 நாட்களைக் கடந்து நான்காவது ஆண்டில் கால்பதித்துள்ள பண்ணையாளர்களின் போராட்டத்திற்கு அரசாங்கம் சரியான எந்த தீர்மானத்தையும் வழங்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வழங்கப்போகும் நிரந்தரத் தீர்வுதான் என்ன என கடந்த ஒக்டோபர் மாதம் முதல் நவம்பர் 12ஆம் திகதி வரை பதிவாகியுள்ள தொடர் வன்முறைச் சம்பவங்கள், கிழக்கு மாகாணத் தமிழர்களின் பொருளாதார முதுகெலும்பையே கேள்விக்குறியாக்கியுள்ளன.
கடந்த சில வாரங்களாக மயிலத்தமடு மாதவனைப் பகுதியில் அரங்கேறி வரும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன
ஒக்டோபர் 20: பண்ணையாளர்கள் அச்சுறுத்தப்பட்டதுடன், அன்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சண்முகம் கோவிந்தராஜன் என்பவரின் பசுவின் கழுத்தில் நான்கு பாரிய காயங்கள் ஏற்பட்டன.
ஒக்டோபர் 27: காலை 8 மணியளவில் மற்றுமொரு பசு கொல்லப்பட்டதுடன், மூன்று கால்நடைகள் காணாமல் போயின.
ஒக்டோபர் 28: சந்திவெளியைச் சேர்ந்த வடிவேல் சோமசுந்தரம் என்பவர் பட்டியில் வைத்து கடத்திச் செல்லப்பட்டு, பின்னர் கரடியனாறு காவல்துறையால் மீட்கப்பட்டார்.
நவம்பர் 05: மாணிக்கம் வடிவேல் என்பவருக்குச் சொந்தமான பசு சுட்டுக் கொல்லப்பட்டு, தோல் உரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.
நவம்பர் 12: சந்திவெளியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரின் 2 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய இரண்டு பசுக்கள் இரவோடு இரவாகச் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு தொடர்ச்சியாகக் கால்நடைகள் படுகொலை செய்யப்பட்டு வரும் நிலையில், குற்றவாளிகளைக் கைது செய்யாமல் வேடிக்கை பார்ப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுமார் 3,025 ஹெக்டேயர் பாரம்பரிய மேய்ச்சல் தரை நிலத்தை மீட்டெடுக்கக் கோரி 2023 செப்டம்பர் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், 1,095 நாட்களைக் கடந்து தொடர்கிறது.
கடந்த செப்டம்பர் 29ஆம் திகதி நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், இப்பகுதியை மேய்ச்சல் நிலமாக வர்த்தமானியில் பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்தது.
ஆனால், அதற்கான காலக்கெடு இன்றுவரை அறிவிக்கப்படவில்லை.
நிரந்தரத் தீர்வு கோரி கடந்த நவம்பர் 2ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக சிவில் சமூக அமைப்புகள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து பாரிய கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
ஆனால், போராட்டம் முடிந்த கையோடு நவம்பர் 12ஆம் திகதி மீண்டும் இரண்டு பசுக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளன.
இது மக்களின் ஜனநாயகப் போராட்டங்களையும் கோரிக்கைகளையும் அரசாங்கம் முற்றாக அலட்சியப்படுத்துகின்றதா என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.
அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நாட்டின் அபிவிருத்திக்காக வரவு செலவுத் திட்டத்தில் பெருமளவு நிதி ஒதுக்கியுள்ளதாகப் பெருமை பேசுகின்றது.
ஆனால், தலைமுறை தலைமுறையாகக் கால்நடை வளர்ப்பை நம்பியிருக்கும் தமிழ்ப் பண்ணையாளர்களின் வாழ்வாதாரம் திட்டமிட்டு அழிக்கப்படுவதைத் தடுக்க அரசாங்கம் தவறியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |