தோல்வியினை மூடிமறைக்க அரசு கபடநாடகம் - ஆபத்தான நகர்வு என்கிறார் எதிரணி எம்.பி
இலங்கையில் மீண்டும் இனவாதத்தை தூண்டிவிடும் வகையில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற அரச தலைவரது செயலணி அமைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி பாரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் (SM Marikkar), மக்களின் பிரச்சினைகளை மூடிமறைக்கும் நோக்குடனேயே குறித்த செயலணி அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டில் பொருளாதாரம் உட்பட பாரிய பிரச்சனைகளை மூடிமறைக்கும் முகமாக இனவாதத்தினைக் கொண்டுவரும் வகையில் இந்த ஒரே நாடு ஒரே சட்டம் என்ற அரச தலைவரது செயலணி உருவாக்கப்பட்டிருப்பதாக நாங்கள் பார்க்கின்றோம்.
இந்தச் செயலணியினை அமைப்பதற்கு அரச தலைவருக்கு இரண்டு வருடங்கள் ஏன் சென்றது என கேள்வி கேட்க விரும்புகிறோம்.
இந்தச் செயலணிக்கு, நாட்டின் சட்டத்திற்கு அச்சுறுத்தல் விடுத்து, இனங்கள் மத்தியில், மதங்கள் மத்தியில் வன்முறையினைத் தூண்டியவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற இலக்கை அடைய முடியும் என்ற அரசாங்கத்தின் கருத்து நகைப்புக்குரியது. இது மிகவும் ஆபத்தான நகர்வு.
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற அரச தலைவரது செயலணியில் தமிழினத்தைச் சேர்ந்தவர்கள் இடம்பெறவில்லை. பெண்களும் இணைத்துக் கொள்ளப்படவில்லை. இதன் மூலம் எங்களுக்குப் புலப்படுவது என்னவெனில், தமது தோல்வியினை மூடிமறைப்பதற்கு அரசாங்கம் மீண்டும் நாட்டில் இனவாதத்தைத் தூண்டிவிடுவதற்கு முற்படுகின்றது.
அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் மத்தியில் உள்ள எதிர்வினையினை மறுபக்கம் திருப்பி விடுவதற்கு கோட்டாபய அரசாங்கம் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற அரச தலைவரது செயலணியைப் பயன்படுத்தவுள்ளதாகவே எமக்குப் புலப்படுகின்றது” என்றார்.