மகிந்தவின் மொட்டுக் கட்சியில் மீண்டும் இணையவுள்ள அரசியல் தலைமைகள்!
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட அரசியல் தலைமைகள் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மீண்டும் பொதுஜன பெரமுன கட்சியில் இணையவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் தான் நிச்சயமாக இணைவதாகவும் கட்சியில் மீண்டும் இணைவது குறித்து தற்போது கட்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பொதுத் தேர்தல்
கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் பொதுஜன பெரமுனவிலிருந்து வெளியேறிய 20க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தன்னுடன் இருப்பதாகவும், இந்தக் குழு நாரஹேன்பிட்டியில் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றதாகவும் ரோஹித அபேகுணவர்தன கூறினார்.

முன்னாள் அமைச்சர்களான பவித்ரா வன்னியாராச்சி, ரமேஷ் பத்திரண மற்றும் சிந்தக மாயாதுன்ன உள்ளிட்ட குழுவினர் இவ்வாறு உள்ளதாகவும் அவர்கள் மீண்டும் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைய விரும்புவதாகவும், அவர்களில் பலர் கடந்த 21 ஆம் திகதி நடைபெற்ற எதிர்க்கட்சி பேரணியில் பங்கேற்றதாகவும் முன்னாள் அமைச்சர் கூறினார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவை விட்டு தான் வெளியேறவில்லை என்றும், கடந்த பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு சரியான தீர்மானத்தை மேற்கொண்டு 'சிலிண்டர்' சின்னத்தின் கீழ் போட்டியிட்டதாகவும் ரோஹித அபேகுணவர்தன மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |