சீரற்ற காலநிலை காரணமாக அதிகரிக்கும் வீதி விபத்துகள்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வீதியிலுள்ள மரங்கள் முறிந்து வீழ்ந்து ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்துள்ளன.
அந்த வரிசையில் பயணிகள் பேருந்து ஒன்றின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்த சம்பவம் ஒன்று கொஸ்கம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினம் (30) கொழும்பிலிருந்து அவிசாவளை நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்றின் மீதே மரம் முறிந்து வீழ்ந்துள்ளது.
மேலதிக சிகிச்சை
கொஸ்கம – அளுத் அம்பலம பகுதியில் நிலவிவரும் அதிக மழையுடனான காலநிலை காரணமாகவே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த விபத்தில் மூவர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கொழும்பு - டுப்ளிகேஷன் வீதியிலும் வாகனமொன்றின் மீது மரமொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் நேற்றைய தினம் (30) இடம்பெற்றுள்ளது.
இதேபோல் கடந்த 6 ஆம் திகதியும் கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள லிபெட்டி பிளாசாவுக்கு அருகில் பேருந்து ஒன்றின் மீது பாரிய மரமொன்று விழுந்து விபத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.