மின் கட்டண அதிகரிப்பு - அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் வெளிவந்த தகவல்
இலங்கையில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம் ஒரு வார காலத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் இன்றைய அமர்வின்போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் இந்த வருடத்துக்கான முதலாவது கூட்டம் இன்று பிற்பகல் அதிபர் தலைமையில் இடம்பெற்றது.
உத்தேச மின் கட்டண திருத்தம்
இதன்போது, உத்தேச மின் கட்டண திருத்தம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, முன்மொழிவுகள் மீதான அவதானிப்புக்காக அமைச்சரவைக்கு ஒரு வார காலம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய மின் கட்டண திருத்தங்களுக்கு அமைய 0 முதல் 30 வரையில் அலகொன்றுக்கான 8 ரூபா என்ற கட்டணத்தை 30 ரூபாவாகவும், 120 ரூபா என்ற நிலையான கட்டணத்தை 400 ரூபாவாகவும் அதிகரிக்கப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
31 முதல் 60 வரையில் அலகொன்றுக்கான 10 ரூபா என்ற கட்டணத்தை 37 ரூபாவாகவும், 240 ரூபாவாக காணப்பட்ட நிலையான கட்டணத்தை 550 ரூபாவரையிலும் அதிகரிப்பதற்கு புதிய யோசனையில் முன்வைக்கப்பட்டுள்ளது.
61 முதல் 90 வரையான அலகொன்றுக்கு 16 ரூபாவாக காணப்பட்ட கட்டணம் 42 ரூபாவாகவும், 360 ரூபாவாக இருந்த நிலையான கட்டணம் 650 ரூபா வரையிலும் அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
தீவிர போராட்டங்களுக்கு தயார்
இதேவேளை, மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு எதிராக நாளைமுதல் பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்.
