யாழில் அதிகரிக்கும் கத்தி முனையில் நகை திருடும் சம்பவங்கள்!
யாழ் மாவட்டத்தில் இரவு வேளைகளில் வீடுகளுக்குள் இறங்கி வீட்டில் உள்ளவர்களை கத்திமுனையில் அச்சுறுத்தி நகை திருடும் மூன்று சம்பவங்கள் இந்த வாரம் இடம்பெற்றுள்ளது.
கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு சம்பவங்கள் ஏற்கனவே பதிவாகியிருந்த நிலையில் இன்று (27)அதிகாலை 2 மணியளவில் யாழ்ப்பாண காவல்துறை பிரிவுக்குட்பட்ட சங்கிலியன் வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் இறங்கிய முகமூடி அணிந்த மூவரடங்கிய கும்பல் வீட்டிலிருந்தவரைக் கட்டிவைத்து தாக்கி கத்தி முனையில் அச்சுறுத்தி வீட்டிலிருந்த 20 பவுண் நகைகளை திருடி சென்றதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.
தொடரும் திருட்டு சம்பவங்கள்

இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த புதன்கிழமையிலிருந்து திருட்டு சம்பவங்கள் இடம் பெற்று வரும்நிலையில் திருட்டு சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே யாழ் மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இன்று வரை கைது செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் குறித்த திருட்டு சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது என பொதுமக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.