நாட்டில் உச்சம் தொடும் தேங்காய் விலைக்கு காரணம் இதுதான்....!
2024 ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு தேங்காயின் சில்லறை விலை 160 லிருந்து 200 ரூபாயாக உயர்ந்துள்ளதுடன் நாட்டு மக்கள் பாரிய சிக்கலை எதிர்நோக்கி வருகின்றனர்
தேங்காய்களின் விலை அதிகமாக இருப்பதற்கு கடந்த 20 ஆண்டுகளில் தேங்காய் உற்பத்தி குறைந்து வருவதே முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை ருஹுணு பல்கலைக்கழகத்தின் (University of Ruhuna) பயிர் அறிவியல் துறையின் மூத்த பேராசிரியர் அருண குமார தெரிவித்துள்ளார்.
நாட்டின் மக்கள் தொகை
அவர் மேலும் தெரிவிக்கையில், 2000 ஆம் ஆண்டளவில் தேங்காய் உற்பத்தி 3,000 மில்லியன் தேங்காய்களாக இருந்ததாகவும், அப்போது நாட்டின் மக்கள் தொகை 18 மில்லியனாக இருந்ததாகவும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், 2024 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மக்கள் தொகை 23 மில்லியனாக அதிகரித்திருந்தாலும், தேங்காய் உற்பத்தி அதிகரிக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு தேங்காய் உற்பத்தி இல்லாததே தேங்காய் பற்றாக்குறைக்கு முக்கிய காரணியாக உள்ளது என்று பேராசிரியர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், தேங்காய் பற்றாக்குறைக்கு நீண்டகால தீர்வாக இந்த ஆண்டு 3 மில்லியன் தென்னை மரக்கன்றுகளை நடுவதற்கு தென்னை பயிர்ச்செய்கை சபை தீர்மானித்துள்ளது.
குறைக்கப்பட்ட உர பயன்பாடு
கடந்த ஆண்டுகளில் தேங்காய்களின் விலையுடன் ஒப்பிடுகையில், 2020 ஆம் ஆண்டில், ஒரு தேங்காய் சந்தையில் 60 முதல் 70 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், ஒரு தேங்காயின் விலை சுமார் 100 ரூபாவாக இருந்தது. 2023 ஆம் ஆண்டின் இறுதியில், ஒரு தேங்காயின் சராசரி சில்லறை விலை 80 - 120 ரூபாவாக இருந்தது.
இருப்பினும், 2024 ஆம் ஆண்டின் இறுதியில், ஒரு தேங்காயின் சில்லறை விலை 160 லிருந்து 200 ரூபாவாக உயர்ந்துள்ளது. தற்போது வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில் தேங்காய் உற்பத்தி சுமார் 700 மில்லியன் தேங்காய்கள் குறைந்துள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் வருடாந்த தேங்காய் உற்பத்தி 2020 இல் 2792 மில்லியன் தேங்காய்களாகவும், 2021 இல் 3120 மில்லியன் தேங்காய்களாகவும், 2022 இல் 3391 மில்லியன் தேங்காய்களாகவும், 2023 இல் 2682 மில்லியன் தேங்காய்களாகவும் பதிவாகியுள்ளது.
தேங்காய் விளைச்சல் குறைவதற்கு பல முக்கிய காரணிகள் பங்களித்துள்ளன. இதில் குறைக்கப்பட்ட உர பயன்பாடு, காட்டு விலங்குகளால் ஏற்படும் சேதம், வானிலை மாற்றங்கள் மற்றும் சமீபத்தில் தென்னை பயிர்ச்செய்கை நிலங்களை பிற திட்டங்களுக்கு விற்பனை செய்தல் ஆகியவை அடங்கும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |