நாட்டில் உச்சம் தொடும் தேங்காய் விலைக்கு காரணம் இதுதான்....!
நாட்டில் கடந்த ஆண்டு முதல் தேங்காயின் சில்லறை விலை 160 லிருந்து 200 ரூபாயாக உயர்ந்துள்ளதால் நாட்டு மக்கள் பாரிய சிக்கலை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதனால் சந்தையில் தேங்காய் விலை சடுதியாக உயர்ந்துள்ளமையைக் கட்டுப்படுத்துவதற்கு தென்னை பயிர்ச்செய்கை சபை நேரடியாக தலையிட தீர்மானித்துள்ளது.
ஏலத்தில் குறைந்த விலைக்கு தேங்காய்களை வாங்கி, நுகர்வோருக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யும் இடைத்தரகர்களே இந்த விலையேற்றத்திற்குக் காரணம் என தென்னை பயிர்ச்செய்கை சபையின் பணிப்பாளர் சுனிமல் ஜயகொடி சுட்டிக்காட்டியுள்ளார்.
தேங்காய்கள் உற்பத்தி
கடந்த வாரம் நடைபெற்ற தேங்காய் ஏலத்தில் ஒரு தேங்காய் 122 - 124 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது.
இருப்பினும், வெளிச்சந்தையில் அதே தேங்காய் 180 - 200 ரூபாய் வரையிலான அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தென்னை பயிர்ச்செய்கை சபையின் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஆண்டு நாட்டில் 2,900 மில்லியன் தேங்காய்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 3,000 மில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், பூச்சிகள் மற்றும் ஏனைய விலங்குகளினால் ஏற்படும் சுமார் 10 சதவீத அறுவடை இழப்பைத் தடுப்பதற்கான விசேட பாதுகாப்புத் திட்டங்களும் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுனிமல் ஜயகொடி மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |