சேலை விலைகள் அதிகரிப்பு - நெருக்கடியில் ஆசிரியைகள்
நாட்டில் தற்போது அதிகரித்துள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பொருட்களின் விலைகள் பன்மடங்காக உயர்ந்துள்ளன.இவ்வாறு அதிகரித்த விலைகளுள் உடுபுடவைகளும் அடங்கும். இவற்றுள் சேலை வகைகளின் விலைகளும் பாரியளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு சேலை விலைகளும் அதிகரித்துள்ளதால் சேலையை கட்டுவதிலும் ஒசரியை கட்டுவதிலும் ஆசிரியைகள் கடுமையான நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் அவர்களுக்கு மாற்று ஆடையை அணிவது தொடர்பில் கவனம் செலுத்துமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சேலைக்கு பதில் மாற்று ஆடை
அரச அதிகாரிகள், அரச சேவையின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில், மாற்று ஆடைகளை அணிந்து பாடசாலைகளுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின், கல்வியமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பெரும் சிரமத்தில் ஆசிரியைகள்
இதேவேளை, பாடசாலைகளுக்கு மோட்டார் சைக்கிள்களில் செல்லும் ஆசிரியைகள், சேலை மற்றும் ஒசரி அணிவதிலும் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.
பாடசாலைகளில் மாணவர்களுடன் செயற்பாட்டுடன் ஈடுபடுவதற்கு ஏற்ற ஆடைகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் பின்லாந்து உள்ளிட்ட அபிவிருத்தி அடைந்த நாடுகளை முன்னுதாரணமாகக் கொள்ளுமாறும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
