இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை
சிறார்களின் போசாக்கு குறைபாடு
இலங்கையில் சிறார்களின் போசாக்கு குறைபாடு தொடர்பில் யுனிசெப்பின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் விடுத்துள்ள பாரதூரமான கருத்து தொடர்பில் அரசாங்கம் உடனடியாக தீர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் சிறார்களின் போசாக்கின்மை தொடர்பில் தற்போது பாரிய நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் மௌனம் காப்பது ஆச்சரியமளிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உணவு வழங்காமல் தவிக்கும் விநியோகஸ்தர்கள்
பாடசாலைகளில் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் ஒரு மாணவனுக்கு 30 ரூபாய் கிடைத்தது. இன்று முட்டையின் விலை 60 ரூபாயாக உயர்ந்துள்ளதால் சத்துணவு விநியோகஸ்தர்கள் பாடசாலைகளுக்கு உணவு வழங்காமல் தவிக்கின்றனர் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
ஒவ்வொரு பொருளின் விலையும் மூன்று மடங்காக உயர்ந்து, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாத நிலை உள்ளது. இப்பிரச்சினைக்கான அரசாங்கத்தின் தீர்வுகள் தொடர்பில் நாட்டுக்கு விரைவில் விளக்கமளிக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் உள்ள குழந்தைகள் 'பசியுடன் படுக்கைக்குச் செல்கிறார்கள்' என்று ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெப் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.