அதிகரிக்கிறது சிகரெட்டின் விலை
சிகரெட்டின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக புகையிலை மற்றும் மது ஒழிப்பு தொடர்பான தேசிய அதிகாரசபையின் அதிகார சபையின் தலைவர் கலாநிதி சமாதி ராஜபக்ச (Dr. Samadhi Rajapaksa)தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
புகையிலை மற்றும் மது ஒழிப்பு தொடர்பான தேசிய அதிகாரசபையினால் தயாரிக்கப்பட்ட, சிகரெட்டுகளுக்கான விலை சூத்திரத்தின் பிரகாரம் அடுத்த பாதீட்டின் பின்னர் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.
சிகரெட் கொள்வனவு செய்வதை குறைக்கும் வகையில் இந்த விலை சூத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதன்படி, இந்த வரவு செலவுத்திட்டத்தின் பின்னர் சிகரெட் ஒன்றின் விலை 4 அல்லது 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன் இன்னும் 5 வருடங்களில் சிகரட் ஒன்றின் விலை ரூபா. 20 சதவீதத்துக்கு மேல் உயரும்.
இலங்கையில் புகைப்பிடிப்பதால் நாளொன்றுக்கு 60 பேரும் வருடத்திற்கு 22,000 பேரும் உயிரிழப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, மக்களின் பாதுகாப்பிற்காக இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
"நாட்டின் வறுமைக்கு புகைபிடித்தல் முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என்று நான் நம்புகிறேன். விலை சூத்திரம் இலங்கை அரசாங்கத்திற்கு வரிகளாக அதிக சதவீதத்தை சேர்க்கிறது. இந்த விலை சூத்திரத்தை குறைக்க புகையிலை நிறுவனம் கடுமையாக உழைத்து வருகிறது, ”என்று அவர் மேலும் கூறினார்.