குறுகிய ஓட்டங்களுக்குள் சுருண்டது மே. தீவுகள் - ஜொலிக்கும் இந்திய வீரர்கள்
கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி பின்னடைவை சந்தித்துள்ளது.
இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டொமினிக்காவில் நடைபெற்று வருகின்றது.
150 ஓட்டங்களுக்குள் சுருண்டது

இந்தப் போட்டியில் தனது முதல் இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 150 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
அதிகபட்சமாக அலிக் அத்தனேஸ் 47 ஓட்டங்களைப் பெற்றதுடன், ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுக்களையும் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர நிறைவில் விக்கெட் இழப்பின்றி 80 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
யஹஸ்வி யஸ்வால் 40 ஓட்டங்களையும் ரோஹித் ஷர்மா 30 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றிருந்தனர்.
அஸ்வினின் புதிய மைல்கல்

இதேவேளை, சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுக்களை வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற மைல்கல்லை ரவிச்சந்திரன் அஸ்வின் எட்டியுள்ளார்.
இதற்கு முன்னர் அனில் கும்ளே மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் மாத்திரமே இந்த சாதனையை படைத்திருந்தனர்.
36 வயதான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 477 விக்கெட்டுக்களையும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 151 விக்கெட்டுக்களையும் சர்வதேச ரி 20 போட்டிகளில் 72 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார்.
உலக டெஸ்ட் வாகையர் கிண்ணத் தொடருக்கான இந்திய அணியில் அஸ்வின் இணைத்துக்கொள்ளப்படாமை குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து இந்த தொடரில் அவர் இடம்பெற்றுள்ளார்.