ஈரானின் 14 அம்ச அமைதித் திட்டம்: ட்ரம்ப் வழங்கிய பதில் - உற்று நோக்கும் உலக நாடுகள்
பாகிஸ்தான் ஊடாக அமெரிக்காவிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஈரானின் புதிய அமைதித் திட்டத்திற்கு வாஷிங்டனிடமிருந்து பதில் கிடைத்துள்ளதாக ஈரானிய அரசு சார்பு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த இராஜதந்திரப் பதிலைப் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மூலம் பெற்றுக்கொண்டதாகவும் தற்போது அது ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தால் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், ஈரானுக்குப் பதிலளித்ததை அமெரிக்காவின் வெள்ளை மாளிகை இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
அமெரிக்கப் படை
ஈரான் முன்வைத்துள்ள 14 அம்சத் திட்டத்தில் தனது எல்லைகளுக்கு அருகிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுதல், துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை நீக்குதல் மற்றும் லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துதல் போன்ற முக்கிய கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

மேலும், வெறும் போர்நிறுத்தத்தை நீட்டிப்பதை விட 30 நாட்களுக்குள் நிரந்தரமான ஒரு உடன்படிக்கையை எட்டிப் போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது.
போதுமான விலை
இந்த முன்மொழிவு குறித்துத் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த 47 ஆண்டுகளில் மனிதகுலத்திற்கும் உலகிற்கும் அவர்கள் செய்த செயல்களுக்காக இன்னும் போதுமான விலையை அவர்கள் கொடுக்கவில்லை எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.

அத்தோடு புளோரிடாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தத் திட்டத்தைத் தான் இன்னும் விரிவாகப் பார்க்கவில்லை என்று குறிப்பிட்ட அதேவேளையில் ஈரான் வழங்கியுள்ள இந்தத் திட்டம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்று என்னால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ட்ரம்பின் இந்தச் சீற்றமான அணுகுமுறை, இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் மீண்டும் ஒரு முட்டுக்கட்டையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |