நீதித்துறையின் சுயாதீனத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் : இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தல்
சிறிலங்கா நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை பாதுகாக்க அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அதேநேரம், சட்டத்தின் இறையாண்மையை பாதுகாப்பதற்கு நீதித்துறையின் சுதந்திரம் இன்றியமையாதது என அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ரொஷான் ரணசிங்கவின் குற்றச்சாட்டு
சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால குழு நியமனம் தொடர்பான மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்மானம் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்தார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலையடைவதாகவும் அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அத்துடன், நீதித்துறையின் தீர்மானத் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் நீதித்துறையின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை கேள்விக்குட்படுத்துமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சங்கத்தின் கோரிக்கை
இந்த நிலையில், நேற்றைய தினம் ரொஷான் ரணசிங்கவால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் உண்மைத் தன்மையை தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீனமான நபர்களை நியமிக்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரியுள்ளது.
குற்றச்சாட்டுக்கள் உண்மையாக இருக்குமானால், அது ஸ்ரீலங்காவின் நீதித்துறை மீதான நம்பிக்கையை சீர்குலைத்துவிடும் என அந்த சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் பொய் என நிரூபிக்கப்பட்டால், ரொஷான் ரணசிங்க நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுக்கு உள்ளாக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.