ராஜபக்சக்களின் நாடாளுமன்ற உறுப்புரிமையை பறியுங்கள் : சந்திரிக்கா ஆவேசம் (காணொளி)
சிறிலங்காவின் நீதித்துறை தற்போது சுயாதீனமாக செயல்படுவதாக முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்க பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ச சகோதரர்களும் அவரது சகாக்களுமே காரணம் என சிறிலங்கா உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்துள்ள நிலையிலேயே, சந்திரிக்கா குமாரதுங்க பண்டாரநாயக்க வெளியிட்டுள்ள காணொளியில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி
இது தொடர்பில் தெரிவிக்கையில், “இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ச சகோதரர்களும் அவரது சகாக்களுமே காரணம் என சிறிலங்கா உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது.
இது தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு முக்கிய தீர்ப்பு இது.
சிறிலங்காவின அரசாங்கம் ஜனநாயக ரீதியில் செயல்படுவதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
உயர் நீதிமன்ற தீர்ப்பு
உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கமைய குற்றவாளிகளாக பெயரிடப்பட்ட அனைவரும் தங்கள் பதவிகளில் இருந்து உடனடியாக விலக வேண்டும்.
அவர்களின் நாடாளுமன்ற உறுப்புரிமையும் நீக்கப்பட வேண்டும்.
நீதிமன்ற உத்தரவை அடிப்படையாக கொண்டு சிறிலங்கா அரசாங்கம் உடனடி விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.
திருடப்பட்ட சொத்துக்கள்
குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்ட தரப்பினரால் திருடப்பட்ட சொத்துக்களை மீண்டும் நாட்டுக்குள் கொண்டு வருவதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையில் இதற்கு முன்னதாக இவ்வாறான சம்பவமொன்று இடம்பெற்றது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளி மற்றும் அவரது மனைவியால் வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட சொத்துக்களையும் பணத்தையும் மீண்டும் இலங்கைக்கு கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
இதற்கமைய, குறித்த நடவடிக்கையை அரசாங்கம் மீண்டும் முன்னெடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |