பசில் மற்றும் இந்திய பெட்ரோலியத்துறை அமைச்சருக்கிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை!
புது டெல்லியில், சிறிலங்கா நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இந்திய பெட்ரோலியத்துறை அமைச்சருக்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த விடயத்தினை இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இந்தியாவுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் குமார தோவால் ஆகியோரை சந்தித்து இருத்தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புது டெல்லியில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தைகளில் இரு நாடுகளுக்கும் இடையில் ஒருங்கிணைந்த தந்திரோபய வழிமுறைகளின் தேவைகள் சம்பந்தப்பட்ட பல விடயங்கள் பற்றி கலந்துரையாட்பட்டுள்ளதாகவும் உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்தியா மற்றும் இலங்கை இடையில் பல்வேறு துறைசார்ந்த இருத்தரப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது தொடர்பான எதிர்கால நோக்கு பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது எனவும் உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.
அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி 90 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் உயர் அதிகாரியாக கடமையாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.
