உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார வல்லரசாக உருவெடுக்கவுள்ள இந்தியா
உலக பொருளாதாரத்தில் 2030ஆம் ஆண்டில் ஜப்பானை பின் தள்ளவைத்து உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என சர்வதேச பொருளாதார மதிப்பீட்டு நிறுவனமான 'எஸ் அண்ட் பி குளோபல்' (S&P Global) தெரிவித்துள்ளது.
சென்ற ஆண்டு (2022) பிரித்தானியாவை பின் தள்ள வைத்து இந்தியா பொருளாதார ரீதியாக உலகின் ஐந்தாவது பெரிய நாடாக முன்னேறியிருந்தது.
இந்நிலையில், அடுத்த 7 ஆண்டுகளுக்குள் 3 ஆவது இடத்துக்கு முன்னேறும் என்று 'எஸ் அண்ட் பி குளோபல்' வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசியாவில் இரண்டாவது இடம்
உலக பொருளாதாரத்தில் தற்போது அமெரிக்கா முதல் இடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும், ஜப்பான் மூன்றாவது இடத்திலும், இந்தியா ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
கடந்த 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் விரைவான பொருளாதார வளர்ச்சியினைக் கண்ட இந்தியா, இந்த ஆண்டிலும் (2023) நிலையான, வலுவான வளர்ச்சியினை அடைந்து வருகிறது.
நுகர்வோர் சந்தை விரிவடைவதால், பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடு அதிகரிக்கும், இதன் காரணமாக 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.3 டிரில்லியன் டொலர்களாக உயரும்.“ எனவும் அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இதன் மூலம் 2030 ஆம் ஆண்டில் ஜப்பான், ஜேர்மனி ஆகிய நாடுகளை பின்தள்ளி உலக பொருளாதாரத்தில் இந்தியா மூன்றாவது இடத்தையும் ஆசியாவில் இரண்டாவது இடத்தையும் விரைவில் பிடிக்கும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக கடந்த ஓராண்டுக்கு மேலாக சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை காணப்பட்டு வருகிறது அனால் இந்த சூழலிலும் இந்தியாவின் பொருளாதாரம் மேம்பட்ட நிலையில் இருப்பதாக சர்வதேச செலாவணி நிதியம் மற்றும் உலகவங்கி போன்ற சர்வதேச அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.
ஆயுத ஏற்றுமதி வருமானம்
மேலும், இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று (24) அருணாச்சல் பிரதேசத்தில் தெரிவித்திருந்தார்.
“2014ஆம் ஆண்டுக்கு முன், ஆயுதங்கள் ஏற்றுமதி மூலம் 1100 கோடி (இந்திய ரூபாய்) வருமானம் இந்தியாவுக்கு கிடைத்ததாகவும், இப்போது 20,000 கோடிக்கு (இந்திய ரூபாய்) அதிகமான வருமானம் ஆயுத ஏற்றுமதி மூலம் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார கொள்கைகளே இந்தியாவின் வளர்ச்சிக்கு காரணம்“ எனவும் அவர் சுட்டிக்காட்டிருந்தார்.
YOU MAY LIKE THIS