இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியாவுக்கே முதலிடம் : வினோ எம்பி பகிரங்கம்
இலங்கைப் (Sri Lanka) பிரச்சினையில், தமிழ் மக்களின் இனப்பிரச்சினையில் இந்தியாவை (India) மீறி எந்தவொரு நாடும் தலையிட முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராத லிங்கம் (Vino Noharathalingam) தெரிவித்துள்ளார்
நாடாளுமன்றத்தில் நேற்று (20) இடம்பெற்ற பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கைக்கு இன்று (20) இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் (S. Jaishankar) ஒரு நாள் விஜயமாக வருகை தந்துள்ளார். அவரது விஜயத்தை கண்டு இந்த நாடாளுமன்றத்திலுள்ள சிலர் அச்சப்படுகின்ற, சந்தேகப்படுகின்ற நிலைமையைக் காணக்கூடியதாகவுள்ளது.
ஜெய்சங்கரின் இலங்கை விஜயம்
பொதுவாக இந்தியா என்று சொன்னால் தமிழில் ஒரு பழமொழி உள்ளது. அது “வேண்டாப்பொண்டாட்டி கைபட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்பது“. அதுபோன்றுதான் இங்கே இருக்கின்ற சிலர் குறிப்பாக இனவாத பார்வை பார்க்கின்ற அரசியல் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு எதிராக கொக்கரிக்கத்தொடங்கி விட்டார்கள்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைக் கண்டு இவர்களுக்கு அச்சம், சந்தேகம் என்று சொன்னால் விரைவில் இலங்கை வரவிருக்கின்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை (Narendra Modi) பார்த்து எந்தளவுக்கு அச்சம் கொள்ளப்போகின்றனர் என்பதை நாங்கள் சொல்லத்தேவையில்லை.
இந்தியா எமது அயல் நாடு, ஆபத்துக்கு உதவிய நாடு, தொடர்ந்தும் உதவிக்கொண்டு இருக்கின்ற நாடு, எந்த ஆபத்துக்கும் எதிர்காலத்தில் உதவி செய்யக்கூடிய நாடு. அவ்வாறான நாட்டின் பிரதிநிதிகள் இங்கு வருகின்றபோது எதற்காக இப்படி கூக்குரலிடுகின்றார்கள்.
அவர்கள் ஒரு நல்ல நோக்கத்துக்காக, இலங்கைக்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையோடு வருகின்ற வேளையில் வேறு கண்ணோட்டத்தோடு பார்க்கின்ற இவர்களால்தான் சிங்கள மக்கள் கூட இந்தியாவை ஒரு எதிரி நாடாக பார்க்கின்ற சூழல் இருக்கின்றது.
இனவாத சிந்தனை
இந்த சபையில் கூட இன்று விமல் வீரவன்ச (Wimal Weerawansa), ஜெய்சங்கர் ஏன் வருகின்றார், அவரின் நோக்கம் என்ன, அவரின் பின்னால் மறைமுக கரங்கள் உள்ளனவா, என்று கேள்வி எழுப்புகின்ற அளவுக்கு இந்தியாவுக்கு எதிரான நிலைமை இருக்கின்றது.
இவ்வாறு இவர்கள் தவறாக சிங்கள மக்களை வழிநடத்துவதனால் தான் சிங்கள மக்களும் இந்தியாவை எதிரியாக பார்க்கின்றார்கள். இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும்.
எங்களை பொறுத்தவரையில் இந்தியாவை மீறி எந்தவொரு நாடும் இலங்கைப் பிரச்சினையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினையில் அல்லது அபிவிருத்தி, பொருளாதாரம் சார்ந்த விடயங்களில் முதலில் தலையிட முடியாது.
அவ்வாறு தலையிடுவதானால் அது இந்தியாவுக்கு பின்னர்தான், இந்தியாவுக்குத்தான் முதலிடம். இந்தியாவை மீறி இங்கு எதுவுமே அசையாது. இதுதான் உண்மை, யதார்த்தம். இதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே இந்தியாவின் தலைவர்கள் வருகின்றபோது அதற்கு எதிராக கருத்துகள் கூறுவதனை, சந்தேகிப்பதை விமல் வீரவன்ச போன்ற இனவாத சிந்தனையுடையவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |