இந்தியா - கனடா விவகாரம் : ட்ரூடோ குற்றச்சாட்டை முன்வைத்தது துரதிஸ்டவசமானது...!
இந்தியாவுக்கு எதிராக வலுவான ஆதாரமின்றி கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டை முன்வைத்தது துரதிஸ்டவசமானது என்று அமெரிக்க-இந்திய இராச்சிய உறவுக்கான அமைப்பின் (யுஎஸ்ஐஎஸ்பிஎஃப்) தலைவா் முகேஷ் அகி தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து வாஷிங்டனில் இவர் அளித்த நேர்காணல் ஒன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பின்னணி
இந்தியாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கடந்த ஜூன் 18-ஆம் தேதி கனடாவில் உள்ள சீக்கிய குருத்வாரா அருகே சுட்டுக் கொல்லப்பட்டாா்.
கொலையில் இந்திய அரசுக்குத் தொடா்பு இருப்பதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டை முன்வைத்தாா். கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்தது. இதைத் தொடா்ந்து இரு நாடுகள் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
“கனடா-இந்தியா இடையே மிகப் பெரிய அளவில் வா்த்தகம் நடைபெற்று வருகிறது. 2.30 லட்சம் இந்தியா மாணவா்கள் கனடாவில் உயா்கல்வி படிக்கின்றனா். சுமாா் ரூ. 4.5 லட்சம் கோடியை இந்தியாவில் கனடா முதலீடு செய்துள்ளது.
இந்தச் சூழலில் வலுவான ஆதாரங்களின்றி பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ கனடா நாடாளுமன்றத்தில் இந்தியாவுக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைத்தது துரதிருஷ்டவசமானது. இதனால், இரு நாடுகளிடையேயான உறவு கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
அமெரிக்கா - இந்திய உறவு
இந்த விவகாரத்தில் இந்தியா மீது அழுத்தம் கொடுக்க அமெரிக்காவைப் பயன்படுத்த கனடா முயற்சிக்கிறது. இது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், முதிா்ச்சி பெற்ற தலைவா்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு நிலைமையை அமைதிப்படுத்த வேண்டும்.
இந்தியா-கனடா இடையேயான உறவு பாதிப்பு, இந்திய-அமெரிக்க உறவிலும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இருந்தபோதும், இந்திய-அமெரிக்க உறவு நீண்ட கால அடிப்படையில் ஆழமான, வலுவான உறவாக தொடரும்.
இரு நாடுகளிடையேயான உறவு என்பது புவிசாா் அரசியல் சாா்புடையது. பொருளாதார விவகாரங்கள் மற்றும் இந்திய-அமெரிக்க வம்சாவளியினா் உறவுகளின் அடிப்படையில் இரு நாடுகளிடையேயான உறவு உருவாகியுள்ளது.
ட்ரூடோ இந்தியா மீது குற்றச்சாட்டை முன்வைப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. உள்நாட்டு அரசியல் முதல் காரணம். பிரதமா் ட்ரூடோவை ஆதரிக்கும் புதிய ஜனநாயக கட்சி (என்டிபி) சீக்கியா்கள் அதிகம் கொண்ட கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, அவா்களின் ஆதரவைப் பெறுவது அவசியம். இரண்டாவது காரணம், ட்ரூடோ மற்றும் இந்திய பிரதமா் நரேந்திர மோடிக்கு இடையே இரண்டாவது முறையாக நடைபெற்ற பேச்சுவாா்த்தை என்பது ஆக்கபூா்வமாக அமையவில்லை.
இதில் ட்ரூடோ கவலைக்குள்ளானதும், அவா் நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டைக் கூறியதற்கு காரணமாக இருக்கலாம்.
இந்தியா வளா்ந்து வரும் நாடாக உள்ளது. பெரிய சக்திவாய்ந்த நாடாக இந்தியா உருவெடுக்க வேண்டுமெனில், பொறுப்புடன் கூடிய நாடாக விளங்குவதும் அவசியம். ஒவ்வொரு நாடும் அவரவா் தேச நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நிஜ்ஜாா் விவகாரத்தில் இரு நாடுகளும் கூறி வரும் கருத்துகள் முற்றிலும் வேறுபட்டவையாக உள்ளன. மேலும், இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தும் முயற்சியை சீனா மேற்கொண்டு வருவதை சமூக ஊடகங்கள் மூலமாக அறிய முடியும்.
இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவில் பாதிப்பை ஏற்படுத்துவதே சீனாவின் நோக்கமாக உள்ளது. எனவே, கனடாவும் இந்தியாவும் பிரச்னைக்குப் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண வேண்டும்.” என்றாா்.