இமாலய எல்லை மோதல்! ஐந்து வருடங்கள் கழித்து சீனாவினுள் புகும் இந்திய விமானங்கள்
இந்தியாவும் சீனாவும் இடையே 2020 முதல் நிறுத்தப்பட்டிருந்த நேரடி விமான சேவைகள் இந்த மாதம் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
2020-இல் இமாலய எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவங்களும் மோதியதில் 20 இந்திய வீரர்கள் மற்றும் 4 சீன வீரர்கள் உயிரிழந்தனர். அதன்பின் இரு நாடுகளின் உறவுகள் பதட்டமடைந்து நேரடி விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எல்லை பதற்றத்தை குறைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, பல சுற்று அதிகாரிகள் மட்ட கூட்டங்கள் நடந்தன.
நேரடி விமான சேவை
கடந்த ஆண்டு ஒக்டோபரில் எல்லைப் பகுதி காவல் தொடர்பான ஒப்பந்தம் எட்டப்பட்டது.
சீனா இந்திய யாத்திரீகர்கள் திபெத் பகுதிகளில் உள்ள புனித தலங்களுக்கு செல்ல அனுமதி வழங்கியது. இந்தியா சீன சுற்றுலாப் பயணிகளுக்கான விசா சேவைகளை மீண்டும் தொடங்கியது.
இந்த நிலையில், ஒக்டோபர் 26 ஆம் திகதி முதல் இந்தியாவின் இண்டிகோ விமான நிறுவனம் கொல்கத்தா–குவாங்சௌ இடையே நேரடி சேவையை மீண்டும் தொடங்குகிறது.
இதனால் இருநாடுகளின் மக்களிடையே தொடர்புகள் மேம்பட்டு, உறவுகள் படிப்படியாக சாதாரண நிலைக்கு வரும் என இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியா-சீனா உறவுகள்
ஒகஸ்டில் சீன வெளியுறவு அமைச்சர் வங் யி டெல்லி சென்றதுடன், இந்தியாவும் சீனாவும் பகைவர்களாக அல்ல, கூட்டாளிகளாக பார்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார்.
அதே மாதம் பிரதமர் நரேந்திர மோடி 7 ஆண்டுகள் கழித்து சீனாவுக்கு சென்று, ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்தித்து உறவுகளை சீர்படுத்த உறுதி மேற்கொண்டிருந்தார்.
இதன்படி, எல்லை பதற்றத்தால் உறைந்து போன இந்தியா-சீனா உறவுகள், விமான சேவைகள் மீண்டும் தொடங்குவது போன்ற நடவடிக்கைகளால் படிப்படியாக சாதாரண நிலைக்கு திரும்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
