முதல் நாடாக இந்தியா - எதில் தெரியுமா..! அமெரிக்கா விடுத்துள்ள அறிவிப்பு
ஏற்றுமதிகள் மீதான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பரஸ்பர வரிகளைத் தவிர்ப்பதற்காக அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் முதல் நாடாக இந்தியா (India) மாறும் என அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) தெரிவித்துள்ளார்.
ஒப்பீட்டளவில் திறந்த வர்த்தக நடைமுறைகளைக் கொண்டிருப்பதால், இந்தியாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் தருவாயில் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
வரி இடைநிறுத்த காலம்
வொஷிங்டனில் நடந்த உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்திர கூட்டங்களின் போது நடைபெற்ற வட்டமேசை அமர்வில் பெசென்ட் இவற்றை குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, அமெரிக்கா (US) இந்தியா மீது விதித்த 26% பரஸ்பர வரி 90 நாள் இடைநிறுத்தத்தில் உள்ளது.
இந்த இடைநிறுத்தமானது ஜூலை 8 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. இருப்பினும், அமெரிக்க வர்த்தகக் கொள்கையின்படி மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவும் 10% வரியை எதிர்கொள்ளும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்திய-அமெரிக்க உறவு
அத்துடன், குடும்பத்துடன் இந்தியா சென்று இன்று அமெரிக்க திரும்பிய துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், ஜெய்ப்பூரில் இருந்தபோது, இந்தியா வரி அல்லாத தடைகளை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, வலுவான இந்திய-அமெரிக்க உறவுகளை உருவாக்க, இந்தியா அதிக அமெரிக்க பொருட்கள், எரிசக்தி மற்றும் இராணுவ உபகரணங்களை இறக்குமதி செய்ய வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
