இந்திய வெளியுறவு செயலரின் சிறிலங்கா விஜயம்- கிசுகிசுக்களை தேடி அலைபவர்கள் தொடர்பில் நாமல் பரபரப்பு கருத்து!
இந்திய நாட்டின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளை பார்வையிடுவதற்காகவே இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா(Harsh Vardhan Shringla) சிறிலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.
மாறாக குறைகளை கண்டறிய அவர் சிறிலங்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவில்லை என, விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச(Namal Rajabaksha) ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர்,
எமது அரசாங்கம் அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் செயற்படுகிறது. ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் அனைத்து நாடுகளுடனும் ஒன்றினைந்து செயற்படுகிறோம். இந்தியா சிறிலங்காவிற்கு அயல்நாடு, இரு நாட்டுக்குமிடையில் வரலாற்று ரீதியில் நல்லுறவு காணப்படுகிறது.
சிறிலங்காவிற்கும் இந்தியாவிற்கும் மத அடிப்படையில் நல்லுறவு காணப்படுகிறது. இந்தியாவின் ஒத்துழைப்புடன் சிறிலங்காவில் முன்னெடுக்கப்பட்ட பல அபிவிருத்தி பணிகள் காணப்படுகின்றன. அவற்றை இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பார்வையிடுவார்.
பல நாடுகளை சேர்ந்தோர் தற்போது சிறிலங்காவிற்கு வருகை தந்துள்ளார்கள். இதன் போது கிசுக்கிசுக்களை தேடி அலைபவர்களும் உள்ளனர். ஆகவே இவ்வாறான காரணத்திற்காக இவர் நாட்டுக்கு வரவில்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை பலப்படுத்தும்வகையில் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளரது வருகை காணப்படுகிறது.
நாட்டின் சுயாதீனத்தன்மையை முன்னிலைப்படுத்தி அரசாங்கம் அனைத்து நாடுகளுடன் ஒன்றிணைந்து செயற்படும். எக்காரணிகளுக்காகவும் சுயாதீனத்தன்மையை விட்டுக்கொடுக்கமாட்டோம். தேசிய வளங்களை விற்கும் கொள்கை அரசாங்கத்திற்கு கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.
