நிறைவு பெற்றது இந்திய மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு !
ஏழு கட்டங்களாக நடைபெற்ற இந்திய மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தேர்தலானது கடந்த 19 ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில் நேற்றைய தினம் (01) நிறைவடைந்துள்ளது.
மக்களவை தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் வெள்ளிக்கிழமை (01) மாலை 05 மணி வரை 65% வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் பீஹார், இமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் சண்டிகர் ஆகிய எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளில் நேற்று (01) வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
தேர்தல் வன்முறைச் சம்பவங்கள்
அதிகபட்சமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் 60.14% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதுடன் மேற்கு வங்கத்தில் ஒரு சில பகுதிகளில் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேற்கு வங்கத்தின் ஒரு வாக்குச்சாவடியில் வன்முறைக் கும்பல் ஒன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், தேர்தலுக்கான ஆவணங்கள் என அனைத்தையும் சூறையாடி குளத்தில் வீசியதாக மாவட்ட தேர்தல் அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
தேர்தலின் வாக்குபதிவுகள்
18 ஆவது இந்திய மக்களவை தேர்தலின் வாக்குபதிவுகள் கடந்த 19 ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில் இந்திய மக்களவைத் தேர்தல் 28 மாநிலங்களிலும், எட்டு யூனியன் பிரதேசங்களிலும் ஏழு கட்டங்களாக நடைபெற்றுள்ளது.
மேலும், வாக்குகளை எண்ணும் பணிகள் எதிர்வரும் நான்காம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |