தமிழ்நாட்டை உலுக்கிய கொடூர சம்பவம் - சாதிய விரோதத்தால் பள்ளிமாணவன் மீது வாள்வெட்டு
நாங்குநேரியில் பள்ளி மாணவனையும், அவனது தங்கையையும் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய வழக்கில் பள்ளி மாணவர்கள் 6 பேரை அதிரடியாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பெருந்தெரு பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சின்னத்துரை மற்றும் அவருடைய தங்கை சந்திரா என்பவர்களே இந்த தங்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு இலக்காகிய இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கோர சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சின்னத்துரையை அவருடன் பயிலும் சில மாணவர்கள் சாதி ரீதியாக தொல்லை பாகுபாடு காட்டி துன்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
சாதிரீதியான விரோதம்

இதனால் மனம் உடைந்த சின்னத்துரை பள்ளி செல்ல மறுத்து வீட்டில் இருந்துள்ளார்.
இதுபற்றி சின்னத்துரை தனது தாயிடம் கூறியுள்ளார். இதையடுத்து ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து பள்ளி நிர்வாகம் சின்னத்துரையை துன்புறுத்திய மாணவர்களை எச்சரித்துள்ளது.
இந்நிலையில் தான் சின்னத்துரையை பழிவாங்க முடிவு செய்த மாணவர்கள் சின்னத்துரையின் வீட்டுக்குள் நுழைந்து அவரை அரிவாளால் உடலில் பல இடங்களில் வெட்டியுள்ளனர்.
தடுக்க சென்ற அவரது தங்கையையும் அந்த கும்பல் வெட்டி உள்ளது. இதனால் இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியுள்ளனர்.
6 மாணவர்கள் கைது

இதனை தொடர்ந்து இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதால் கண்காணிப்பு இல்லத்தில் காவல்துறையினர் அடைத்துள்ளனர்.
இந்த சம்பவத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள், இயக்குநர்கள் என பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
