இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் : இலங்கைக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
இந்தியா (India) - பாகிஸ்தானுக்கு (Pakistan) இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக இலங்கையின் வெற்றிலை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை இலங்கை வெற்றிலை ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளமையால் கராச்சிக்கான வெற்றிலை ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டிய, எப்பலதெனிய வெற்றிலை விவசாய நல சங்கத்தின் தலைவர் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
வெற்றிலை ஏற்றுமதி
இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு அதிகளவான வெற்றிலை ஏற்றுமதி இடம்பெறுவதாகவும் வாரத்தில் இரு நாட்களுக்கு விவசாயிகளிடமிருந்து வர்த்தகர்கள் வெற்றிலையைக் கொள்வனவு செய்வதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
எனினும், விமான சேவை நிறுத்தப்பட்டமையினால் வெற்றிலைகள் விமான நிலையத்தில் தேங்கியுள்ளதாகவும் எப்பலதெனிய வெற்றிலை விவசாய நல சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டார்.
அத்துடன் வர்த்தகர்கள் வெற்றிலைகளைக் கொள்வனவு செய்யாமையினால் உள்நாட்டுச் சந்தைக்கு வரும் வெற்றிலையின் அளவு அதிகரிக்கும் எனவும் எதிர்காலத்தில் வெற்றிலையின் விலை குறைவடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
