இந்தியா-மாலைதீவு விவகாரம்: எடுக்கப்பட்டுள்ள இறுதி முடிவு
இந்தியாவுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் முடிவில் மாலைதீவில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரை வெளியேற்ற இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.
மேலும், மே மாதத்திற்குள் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என மாலைதீவின் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா-மாலைதீவுகள் இடையே 2 வாரங்களாக நடைபெற்று வரும் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை டெல்லியில் நிறைவடைந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் வாக்குறுதி
மாலைதீவின் புதிய அதிபராக முகமது முய்சு பதவியேற்றதன் பின்னர் ,இந்தியாவிற்கும் மாலைதீவுக்குமிடையிலான பிரச்சினை ஆரம்பமாகியது.
முகமது முய்சு தேர்தல் வாக்குறுதியாக இந்திய ராணுவத்தை வெளியேற்றுவோம் என்று வாக்குறுதி அளித்திருந்தார். பதவியேற்றதன் பின்னர் இந்திய ராணுவத்தை நாட்டில் இருந்து வெளியேற்றுவோம் என்று முடிவில் உறுதியாக உள்ளார்.
அண்டை நாடுகளான இந்தியாவும் சீனாவும், மாலைதீவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க, கடும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.
இறுதி முடிவு
இந்நிலையில், முகமது முய்சு அதிபரானதன் பின்னர் இந்தியா உடனான உறவில் விரிசல் ஏற்பட்டது.
அதிபரானதன் பின்னர் முகமது முய்சு முதல் அரச பயணமாக சீனாவுக்கு சென்றதுடன் எதிர்வரும் மார்ச் 15ம் திகதிக்குள் இந்திய இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்ற கெடுவும் விதித்தார்.
தற்போது மாலைதீவு மற்றும் இந்தியா இந்த விவகாரம் தொடர்பில் முன்னெடுத்த பேச்சுவார்த்தையின் முடிவில், மார்ச் 10ம் திகதி முதற்கட்டமாக இராணுவத்தினரின் ஒரு பகுதி வெளியேறும் என்றும் மே மாதம் 10ம் திகதி எஞ்சிய இராணுவத்தினர் வெளியேறுவார்கள் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |