இந்தியாவின் பாதுகாப்புக்கு பங்கம் - மோசமான முடிவுகளை எடுக்குமா இலங்கை..
இந்தியாவின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்காத விடயங்களை இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டும், அவ்வாறு எடுக்கத் தவறுவார்களாக இருந்தால் அதனுடைய விளைவுகள் மிக மோசமாக போய்விடும் என நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று(26) இடம்பெற்ற தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(Plote) மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன் போது சீனாவினுடைய ஆயுதக் கப்பல் ஒன்று இலங்கைக்கு வரப்போவதாக கூறப்படும் செய்திகள் தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்? இதற்கு பதிலளித்த அவர்,
ஆபத்தான நிலையில் இலங்கை

“ஒரு ஆபத்தான நிலையில் இலங்கை போய்க் கொண்டிருக்கின்றது. ஏனென்றால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு அதே போன்று இலங்கை சீனாவுடன் வைத்திருக்கின்ற உறவு நிலமைகளை மோசமாக்கி கொண்டு வருகிறது.
இதனை இலங்கை மிகக் கவனமாக கையாள வேண்டும். சீனாவின் உடைய ஆதிக்கம் இங்கு கூடிக் கொண்டு வருமாக இருந்தால் முக்கியமாக இராணுவ ரீதியான ஆதிக்கங்கள் கூடிக் கொண்டு வருமாக இருந்தால் அது இலங்கையில் இருக்கின்ற மக்களை பெரிய அளவில் பாதிக்கும்.
இங்கு சீனா தனது பிரசன்னத்தை கூட்டுகின்ற முயற்சி எடுக்கிறது, அதாவது வடபுலத்திலே அவர்கள் இந்தியாவினுடைய பாதுகாப்புக்கு அச்சத்தை கொடுத்து விடுவார்கள் என்கின்ற எண்ணப்பாடு இந்தியாவுக்கு வருமாக இருந்தால் அது எங்களைத்தான் கூடுதலாக பாதிக்கும்.
ஆகவே இந்தக் ஆய்வுக்கு கப்பல் வருவது என்பது இந்தியாவைப் பொறுத்தவரையில் அவர்களுடைய பாதுகாப்புக்கு அச்சம் வரக்கூடியதாக அவர்கள் பார்க்கின்றார்கள். அதனை தவிர்ப்பதற்கான முழுமையான முயற்சியை இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டும்.
அவ்வாறு எடுக்க தவறுவார்களாக இருந்தால் அதனுடைய விளைவுகள் மிக மோசமாக போய்விடும்” - என்றார்.