அமெரிக்காவை புறக்கணிக்கும் இந்தியா! அமெரிக்கர்களின் கவனத்தை ஈர்த்தார் நிக்கி ஹேலி
அமெரிக்காவை பலவீனமான நாடாக இந்தியா பார்ப்பதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், தெற்கு கரோலினா மாகாண முன்னாள் ஆளுநருமான நிக்கி ஹேலி தெரிவித்துள்ள கருத்தானது தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளார்களில் ஒருவரான நிக்கி ஹேலி நேற்றைய தினம் (07) அமெரிக்க ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.
இதன்போது, உலக நாடுகளை வழிநடத்தும் வல்லமை அமெரிக்காவிற்கு இருப்பதாக இந்தியா நம்பவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
புத்திசாலித்தனமான நகர்வு
அமெரிக்காவில் தற்போது நிகழும் ஜனநாயகக் கட்சியின் ஆட்சியில் அமெரிக்கர்கள் உலகை வழிநடத்துவார்கள் என இந்தியா நம்பவில்லை என அவர் கூறினார்.
அமெரிக்காவுடன் நட்புறவைப் பேண இந்தியா விரும்பினாலும் அமெரிக்கா மீது இந்தியாவிற்கு பெரும் நம்பிக்கையில்லை, உலகளாவிய நடப்பு சூழலைக் கருதியே இந்தியா புத்திசாலித்தனமான நகர்வுகளை மேற்கொள்கிறது, அதனால்தான் அமெரிக்காவை விட ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.
நான் இந்தியாவை அறிவேன், பிரதமர் மோடியிடம் நான் நேரடியாகவே பேசியிருக்கிறேன், இந்தியாவுக்கு அமெரிக்காவுடனான நட்புறவில் விருப்பம் தான் ஆனாலும் அவர்கள் இப்போதைக்கு அமெரிக்கா மீது சந்தேகத்தில் உள்ளனர், நாங்கள் பலவீனமாக இருப்பதாக உணர்கிறார்கள், அதனாலேயே ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டுகின்றனர், அங்கிருந்துதான் அவர்களுக்கு நிறைய இராணுவத் தளவாடங்கள் கிடைக்கின்றன எனவும் அவர் பேசினார்.
சீனா மீதான சார்பு
இந்தச் சூழலில் நாங்கள் எப்போது நம்பிக்கையை மீட்டெடுக்கிறோமோ அப்போது இந்தியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இஸ்ரேல், ஜப்பான், தென் கொரியா போன்ற நண்பர்கள் எங்களிடம் வருவார்கள்.
இந்நிலையில், சீனா மீதான சார்பை குறைக்க ஜப்பான், இந்தியா பெருமுயற்சிகளை எடுத்துவருகின்றன இத்தகைய சூழலில், அமெரிக்கா தனது கூட்டணி உறவுகளை வலுவாகக் கட்டமைக்கும் காலம், குடியரசுக் கட்சி அதனை மீட்டெடுக்கும் என அவர் மேலும் கூறினார்.
சீனா பொருளாதார ரீதியாக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது, இந்தச் சூழலில் அவர்கள் அமெரிக்காவுடன் போருக்கு ஆயத்தமாகி வருகிறார்கள், அது அவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு என்றும் அவர் கூறினார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் இந்தியாவைப் பற்றிய நிக்கி ஹேலியின் பார்வை அதிக கவனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |