தென் ஆபிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இதனால் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்துள்ளது.
இந்தியா - தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று (3) கேப்டவுனில் ஆரம்பமாகியது.
முதல் நாள் ஆட்டம்
நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தென் ஆபிரிக்கா அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆபிரிக்கா 55 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்களையும் இழந்தது.
இந்திய அணி சார்பில் மொகமத் சிராஜ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் களமிறங்கிய இந்திய அணி 153 ஓட்டங்கள் பெற்று அனைத்து விக்கட்களையும் இழந்தது.
இந்திய அணி சார்பில் விராட் கோலி 46 ஓட்டங்கள் பெற்றார். தென் ஆபிரிக்கா சார்பில் ரபாடா, நிகிடி மற்றும் பர்கர் ஆகியோர் தலா 3 விக்கட்டுகளை வீழ்த்தினர். இந்நிலையில் இந்திய அணி 98 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருந்தது.
தென் ஆபிரிக்கா அணி
இதனை தொடர்ந்து முதல் நாளிலேயே தனது 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆபிரிக்கா அணி 17 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 62 ஓட்டங்கள் பெற்றதுடன் முதல் நாள் ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது.
தென் ஆபிரிக்கா அணி சார்பில், எய்டன் மார்க்ரம் 36 ஓட்டங்களுடனும், டேவிட் பெடிங்காம் 7 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்திய அணி சார்பில் முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளும், பும்ரா 1 விக்கெட்டும் வீழ்த்தி இருந்தனர்.
இரண்டாவது நாள் ஆட்டம்
இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் இன்று(4) ஆரம்பமாகியது.
ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே டேவிட் பெடிங்காமை பும்ராவின் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த ஆட்டத்தில் இந்திய அணி சார்பில் பும்ரா 6 விக்கட்டுகள் வீழ்த்தினார்.
விக்கட்டுக்கள் வீழ்ந்தாலும், எய்டன் மார்க்ரம்1 03 பந்துகளில் 106 ஓட்டங்கள் பெற்று சதமடித்து சிராஜின் பந்துக்கு ஆட்டமிழந்தார்.
தென் ஆபிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 36.5 ஓவர்களுக்கு 176 ஓட்டங்கள் மட்டுமே அடித்தது.
இந்திய அணியின் வெற்றி
இதன் மூலம் இந்திய அணிக்கு 79 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 3 விக்கட்டுகளை மட்டுமே இழந்து 80 ஓட்டங்கள் பெற்று 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே டெஸ்ட் போட்டி 2வது நாளிலேயே முடிவுக்கு வந்துள்ளது.
இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக யஸஸ்வி ஜெய்ஸ்வால் 28 ஓட்டங்கள் அடித்தார். தென் ஆபிரிக்க அணி சார்பில் பர்கர், ரபாடா மற்றும் மார்கோ ஜான்சன் ஆகியோர் தலா 1 விக்கட் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
