இந்தியாவின் ஆதரவு பலஸ்தீனத்துக்கே: மோடிக்கு வலியுறுத்தும் எம்பி
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே ஒரு வாரத்தைக் கடந்தும் போா் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தியா தனது முழுமையான ஆதரவினை பலஸ்தீன மக்களுக்கு வழங்க வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடிக்கு, மஜ்லிஸ் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசி வலியுறுத்தியுள்ளாா்.
ஹைதராபாதில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் வைத்தே இந்த விடயத்தினை அவர் முன்மொழிந்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
இன அழிப்பு
கொடூரமானவர்களாக செயல்படும் இஸ்ரேல் அரசு கடந்த ஒரு வாரமாக காசாவில் குண்டுகளை வீசி உக்கிரமாக போர் நடத்தி வருகிறது.
இதில், பலஸ்தீன பெண்கள், குழந்தைகள் உட்பட 2,000 க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டது மாத்திரமல்லாமல், ஆயிரக்கணக்கானோா் காயமடைந்துள்ளனா்.
இது முஸ்லிம்களின் பிரச்சினை மாத்திரமல்ல, மனிதாபிமான பிரச்சினையாகும், இதனால் காசாவில் நடக்கின்ற இந்த விடயத்தினை இன அழிப்பு நடவடிக்கை என்று கூறவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்தியா இந்த விடயங்களை கண்டிக்க வேண்டும், இஸ்ரேலின் போா்க் குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மற்ற நேரங்களில் மனித உரிமைகள் குறித்து பேசும் உலக நாடுகள், இந்த விடயத்தில் மெளனமாக இருப்பதைப் போல இந்தியா இருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் இந்த வேளையிலே வலியுறுத்தியிருந்தார்.
நாம் எப்போதும் பலஸ்தீனத்துக்குத் தான் ஆதரவாக இருக்க வேண்டும், 70 ஆண்டுகளாக அந்த பிராந்தியத்தினை கைப்பற்றும் ஆக்கிரமிப்பாளர்களாக செயலாற்றி வரும் இஸ்ரேலினை எதிர்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
அரேபியா்களின் மண்
இதில், இஸ்ரேலின் பிரதமா் நெதன்யாகு ஒரு பெரும் தீயசக்தியாகவும், போா்க் குற்றவாளியாகவும் உருவெடுத்து மனிதாபிமானமின்றி செயற்பட்டு வருகிறார் என்றும் அசாதுதீன் வலியுறுத்தினார்.
பலஸ்தீன மக்களுக்கு எதிராக மிகப்பெரிய கொடுமை அரங்கேறுகிறது, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் மெளனப் பாா்வையாளா்களாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், இந்த நேரத்தில் பிரதமா் மோடியும் அவ்வாறு இருத்தலாகாது என்று அவரிடம் நாங்கள் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம் என்றும் அவர் கூறினார்.
பலஸ்தீன மக்களுக்கு பிரதமா் மோடி உறுதியான ஆதரவினை வழங்க வேண்டும், காசாவில் பலஸ்தீன மக்களுக்கு எதிராக இடம்பெறும் கொடுமைகளைக் கண்டிக்க வேண்டும்.
பலஸ்தீனம் அரேபியா்களின் மண் என மகாத்மா காந்தி கூறியதை நினைவில் கொண்டு செயலாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.