இந்திய தலைநகரில் தொடரும் பதற்றம்: விவசாயிகள் மீது தாக்குதல் நடாத்தும் காவல்துறையினர்
புதிய இணைப்பு
புது டெல்லியை நோக்கி "டெல்லி சலோ" (Delhi Chalo) எனும் முழக்கத்துடன் பல கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வந்த விவசாயிகளின் பேரணி நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி சென்றனர்.
இந்நிலையில் டெல்லியின் சம்பு எல்லையில் விவசாயிகளின் போராட்டத்தை கலைக்கும் வகையில் காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியுள்ளனர்.
இதனால் பல போராட்டக்காரர்கள் அங்குமிங்கும் ஓடினர். ஆனால், இதனை பொருட்படுத்தாமல் பேரணியாக உள்ளே நுழைய விவசாயிகள் முயன்று வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளால் டெல்லியை சுற்றி தற்போதைய நிலைமை பதற்றமாக இருந்து வருகிறது.
#WATCH | Police fire tear gas to disperse protesting farmers at Punjab-Haryana Shambhu border. pic.twitter.com/LNpKPqdTR4
— ANI (@ANI) February 13, 2024
முதலாம் இணைப்பு
விவசாயிகள் நடைபயணமாகவும் கனரக வாகனங்களிலும் டெல்லி நோக்கிய தங்கள் போராட்ட பேரணியை ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத்திய அமைச்சர்களுடன் நேற்றைய தினம்(12) ஐந்து மணி நேரம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் தீர்வு எட்டப்படாததையடுத்து விவசாயிகள் இந்த போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிய போராட்ட பேரணி
வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும், சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லி நோக்கி பேரணி என்ற பெயரில் ஆரம்பமாகியுள்ள இந்த போராட்டத்தில் சுமார் 200 விவசாய அமைப்புகளை சேர்ந்த 15 முதல் 20 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்கவுள்ளனர்.
அத்துடன், 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 500 கனரக வாகனங்களில் டெல்லி-நொய்டா எல்லையில் விவசாயிகள் திரண்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
விவசாயிகளின் போராட்டம்
உத்தர பிரதேசம், சண்டிகர் மற்றும் பஞ்சாப் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளும் இந்த போராட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
இந்த நிலையில், டெல்லி நோக்கிய விவசாயிகளின் போராட்டம் காரணமாக எதிர்வரும் மார்ச் மாதம் 12 ஆம் திகதி வரை டெல்லி எல்லையில் பேரணி, பொதுக் கூட்டம் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, டெல்லி எல்லைக்குள் போராட்டம், பேரணி நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், கனரக வாகனங்கள் நுழைவதற்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தீவிர சோதனை
அத்துடன், மூன்று மாநிலங்களில் இருந்து டெல்லிக்குள் நுழையும் எல்லைகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சாலைகளில் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் தீவிர சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், கடந்த 2020 ஆம் ஆண்டு விவசாயிகளால் நடத்தப்பட்ட போராட்ட சூழல் மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |