ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்த விஜயகாந்த் : இலங்கையின் தமிழ் அரசியல்வாதிகள் இரங்கல்
ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்த தே.தி.மு.க தலைவரும் நடிகருமான விஜயகாந்த்துக்கு இலங்கையிலுள்ள தமிழ் அரசியல் தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை விஜயகாந்த் காலமான நிலையில், தற்போது பொது மக்கள் அஞ்சலிக்காக கட்சி தலைமையகத்தில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள், கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வரும் நிலையில், இலங்கையிலுள்ள தமிழ் அரசியல் தரப்பினரும் தற்போது தங்கள் இரங்கல்களை சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டுள்ளனர்.
மனோ கணேசன்
சூறாவளியாக எழுந்த விஜயகாந்த திடீரென அமைதி தென்றலாக மாறியதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், புரட்சி தமிழ் நடிகர் மற்றும் எழுச்சி அரசியலர் என்பவற்றை மீறி சிறந்த மனிதர் என அறியப்பட்ட தேதிமுக தலைவருக்கு ஆழ்ந்த அஞ்சலி என மனோ கணேசன் தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் இரங்கல் வெளியிட்டுள்ளார்.
Goodbye Vijay! Our deepest sympathies.#கெப்டன் #விஜயகாந்த்
— Mano Ganesan (@ManoGanesan) December 28, 2023
சூறாவளியாக எழுந்தார். திடீரென அமைதி தென்றல் ஆனார். புரட்சி தமிழ் நடிகர், எழுச்சி அரசியலர் என்ற பிரபலங்களை மீறி #சிறந்த #மனிதர் என அறியப்பட்டார். #தேதிமுக தலைவருக்கு ஆழ்ந்த அஞ்சலி!#மனோகணேசன் தலைவர்- #தமுகூ pic.twitter.com/5ir1oJnjiZ
கனகரத்தினம் சுகாஷ்
இதேவேளை, ஈழத் தமிழர்களையும் தமிழ்த் தேசியத்தையும் உளமார நேசித்த விஜயகாந்த்தின் மறைவிற்கு ஆழ்ந்த அஞ்சலிகள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும், சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
#தமிழகத்தின் தேசிய முற்போக்குத் திராவிடர் கழகத்தின் தலைவரும் ஈழத் தமிழர்களையும் தமிழ்த் தேசியத்தையும் உளமார நேசித்த மரியாதைக்குரிய #விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு எங்கள் ஆழ்ந்த #அஞ்சலிகள்!? pic.twitter.com/joIBeiq4VO
— Kanagaratnam Sugash (@Sugashkanu) December 28, 2023
புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ள மேர்வின் சில்வா : புது யுகத்துக்குள் இலங்கை காலெடுத்து வைக்கும் எனவும் உறுதி!
சபா குகதாஸ்
மேலும், மக்கள் திலகத்தையடுத்து ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை உணர்வு பூர்வமாக நேசித்தவர் விஐயகாந்த் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கு விஐயகாந்தின் நூறாவது திரைப்படமான கெப்டன் பிரபாகரன் மற்றும் அவரது மூத்த மகனுக்கு விஐய் பிரபாகரன் என பெயர் வைத்தமை சிறந்த எடுத்துக் காட்டு என அவர் கூறியுள்ளார்.
இவற்றுக்கு அப்பால் தன்னால் இயன்ற நிதி உதவிகளை விடுதலைப் போராட்டத்திற்கு அவர் வாரி வழங்கியதாகவும் அவர் ஏழைகளின் தலைவன் எனவும் சபா குகதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், விஐயகாந்த்தின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பு எனவும் ஈழதேசம் என்றும் அவரை மறவாது எனவும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |