பிரபாகரனை பிடிக்க விரைந்த இந்தியப் படை! நடந்தது என்ன
1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியா தனது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்த தினம்.
ஒரு மோசமான வரலாற்றை ரத்தத்தால் எழுதுவதற்கு பாரத தேசம் தேர்ந்தெடுத்த தினமது.
இந்தியா தனது வரலாற்றில் எடுத்த மிகவும் மோசமானதொரு முடிவு என்று பின் நாட்களில் அரசியல் ஆய்வாளர்களாலும் போரியல் வல்லுநர்களாலும் குறிப்பிடப்பட்ட அந்த இராணுவ நடவடிக்கையை இந்தியா அன்றைய தினம் தான் ஆரம்பித்தது.
நினைத்துப் பார்க்க முடியாத இராணுவ நடவடிக்கை
அன்று ஆரம்பிக்கப்பட்ட அந்த இராணுவ நடவடிக்கை சுமார் 22 வருடங்களையும் கடந்து, முள்ளிவாய்க்கால் வரை தொடரப் போகிறது என்று இந்தியாவின் தலைவர்களோ அல்லது விடுதலைப் புலிகளின் தலைவர்களோ கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.
1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்பதாம் திகதி இரவு இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின் மாலை செய்தி அறிக்கை நிலைமையின் தீவிரத்தை யாழ்ப்பாண மக்களுக்கு நன்றாகவே விளக்கி இருந்தது.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய படைகள் போர் பிரகடனம் செய்திருந்த விடயம் செய்தி அறிக்கையில் வெளியிடப்பட்டிருந்தது.
நிராயுதபாணி ஆக்கும் நோக்கம்
விடுதலைப் புலிகளை நிராயுதபாணி ஆக்கும் நோக்கத்துடன் இந்திய அமைதி காக்கும் படையினர் களமிறக்கப்பட்டிருப்பதாக லங்கா புவத்தை மேற்கோள் காண்பித்து அந்தச் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதை விட, விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்களுடைய தலைக்கு 1 மில்லியன் ரூபா அறிவிக்கப்பட்ட விடயமும் அந்தச் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு விடுதலைப்புலிகளின் தலைவரை பிடிக்க இந்திய படைகள் மேற்கொண்ட நடவடிக்கை - விடுதலைப் புலிகளின் பதில் நடவடிக்கைகள் பற்றி ஆராய்கிறது இன்றைய உண்மையின் தரிசனம்,
